சென்னை,
கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவருக்கு இவ்வளவு சிறப்பாக நடிக்கவும் வருகிறதே என்று வியந்தேன். தனுஷ் இவருடைய மகன்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. என மம்முட்டி பேசியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, மம்முட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் 20-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி படக்குழுவினர் பல்வேறு இடங்களில் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பாராட்டிய மம்முட்டி
இப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியில் நடிகர் மம்முட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து வியந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா மிகப்பெரிய இயக்குனர். ஒருமுறை தற்செயலாக அவர் நடித்த 'ஹபீபி' திரைப்படத்தைப் பார்த்தேன். தமிழ் சினிமாவில் அபூர்வமாக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய வாழ்க்கையைப் பேசும் படமாக அது இருந்தது. அந்தப் படத்தில் கஸ்தூரி ராஜாவின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவருக்கு இவ்வளவு சிறப்பாக நடிக்கவும் வருகிறதே என்று வியந்தேன். தனுஷ் இவருடைய மகன்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேசிய விருது பெறச் சென்றிருந்தபோது தனுஷிடம் அவரது தந்தை 'ஹபீபி' படத்தில் சிறப்பாக நடித்திருந்ததைப் பற்றிக் கூறினேன். அதைக் கேட்டு தனுஷ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்" என்று தெரிவித்தார்.
மம்முட்டிக்கு நன்றி தெரிவித்த இயக்குனர்
மம்முட்டியின் இந்தப் பேச்சு சமுக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து 'ஹபீபி' படத்தின் இயக்குனர் மீரா கதிரவன், மம்முட்டிக்கு நன்றி தெரிவித்து தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், மகத்தான கலைஞர், மற்றொருவரின் திறமையை அடையாளம் கண்டு இன்னொரு திரைப்படத்தின் மேடையில் மனம் திறந்து பாராட்டுவது கலையின் மீதான பேரன்பும் பெருந்தன்மையுமன்றி வேறென்ன? மம்முட்டி சாரின் வார்த்தைகள் எங்களது எளிய முயற்சிக்குக் கிடைத்த பெருவெளிச்சம். இன்னும் தொலைதூரக் கனவுகளை நோக்கிப் பயணிப்பதற்கான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது. பேரன்பின் கலைஞன் மம்முக்காவுக்கு நெஞ்சார்ந்த நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

