சென்னை: புழல் மத்திய சிறைக்குள் உள்ளாடையில் போதைப்பொருள்களை மறைத்து கடத்த முயன்ற சிறை மருத்துவமனை செவிலியர் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.

சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனைப் பிரிவு, விசாரணைப் பிரிவு, மகளிர் பிரிவு என மூன்று பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்குள் அவ்வப்போது சிறைக் காவலர்கள் மேற்கொள்ளும் சோதனைகளின்போது கஞ்சா, செல்போன்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை இரவுப் பணிக்கு சிறை ஊழியர்கள் வந்தபோது வழக்கம்போல் சிறைக் காவலர்கள் நுழைவுவாயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது புழல் சிறை ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சி.கே. கனகராஜ், புழல் மத்திய சிறையின் விசாரணைக் கைதிகள் பிரிவு மருத்துவமனையில் செவிலியராக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.

பணிக்கு செல்வதற்காக சிறையின் பிரதான நுழைவுவாயில் வழியாக கனகராஜ் உள்ளே சென்றபோது, அவரிடம் சிறைக் காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர் தனது உள்ளாடைக்குள் போதைப்பொருள்களை மறைத்து வைத்து சிறைக்குள் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து பிரித்துப் பார்த்தபோது, அதில் 300 கிராம் கஞ்சா, 30 கிராம் உயர்ரக போதைப்பொருள், சந்தனம், குங்குமம் பாக்கெட்டுகள் மற்றும் சென்ட் பாட்டில் ஆகியவை இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து செவிலியர் உதவியாளர் கனகராஜிடம் சிறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவரிடம் வழங்குவதற்காக இரண்டு பெண்கள் தன்னிடம் கஞ்சா உள்ளிட்ட பொருள்களைக் கொடுத்து அனுப்பியதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து சிறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப் பதிவு செய்து செவிலிய உதவியாளர் கனகராஜை கைது செய்தனர்.

மேலும், இந்தக் கடத்தல் முயற்சியின் பின்னணியில் இருப்பவர்கள் யார், இரண்டு பெண்களுக்கும் இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்பு என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க சிறைக் காவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், சிறை மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியரே உள்ளாடையில் மறைத்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கடத்த முயன்ற சம்பவம் புழல் மத்திய சிறை வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nursing assistant arrested for smuggling narcotics hidden in undergarments into Puzhal Central Prison

ராஜபாளையத்தில் 700 ஆண்டுகள் பழைமையான மரம்