பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள மணியம்மை நகர் குடியிருப்புப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அந்த பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீருடன் கழிவுநீர் கலப்பதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டு வருவதாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னை கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 67-ஆவது வார்டில் அமைந்துள்ள மணியம்மை நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாகக் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவிதமான நிரந்தர நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்களின் குற்றம்சாட்டாக உள்ளது.

குடிநீர் கிடைக்காததால் அன்றாடத் தேவைகளுக்குக்கூட தண்ணீரின்றி தவித்து வருவதாகவும், வேறு பகுதிகளுக்குச் சென்று தண்ணீர் எடுத்துவர வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கிடையே, குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்தனர்.

மறியல் போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் காலிக் குடங்களுடன் பேப்பர் மில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமாடசாமி மற்றும் கே-1 செம்பியம் காவல் நிலைய ஆய்வாளர் கோபால் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து மக்களைச் சமாதானப்படுத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேயர், கவுன்சிலர் எங்கே? மக்கள் சரமாரிக் கேள்வி!

தங்களது பகுதியில் ஒரு மாதமாகக் குடிநீர் பிரச்னை நிலவி வரும் நிலையில், 67-ஆவது வார்டு கவுன்சிலர் தாவூத் பி. இதுவரை நேரில் வந்து மக்களின் குறைகளைக் கேட்டறியவில்லை என்றும், பிரச்னைக்குத் தீர்வு காண எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், சென்னை மாநகர மேயரும் தங்களது பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்னைகளைக் கண்டுகொள்ளவில்லை எனப் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எங்களது பிரச்னையைக் கண்டுகொள்ளவில்லை. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகுதான் காவல்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால், எங்களுக்குக் குடிநீர் கிடைப்பதற்கான நிரந்தரத் தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.

எங்கள் பகுதி கவுன்சிலர் எங்கே இருக்கிறார்? அவரை எங்களால் பார்க்கவே முடியவில்லை. எங்களுடைய பிரச்னைகளைக் கேட்கவும், தீர்வு காணவும் மக்கள் பிரதிநிதிகள் முன்வருவதில்லை. தேவைப்பட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து, எங்கள் கவுன்சிலரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்" என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குடிநீர் விநியோகத்திற்கான அடிப்படை வசதிகள் இருந்தும், ஒரு மாதமாகப் மக்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் நிலை ஏன் ஏற்பட்டுள்ளது? குடிநீர் வாரிய அதிகாரிகளும் உள்ளாட்சி நிர்வாகத்தினரும் இதுவரை ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை? மக்கள் பிரதிநிதிகள் தங்களது வார்டில் நிலவும் அடிப்படைப் பிரச்னைகளைக் கண்காணிக்க வேண்டாமா? எனப் பல்வேறு கேள்விகளை அந்தபகுதி மக்கள் எழுப்பியுள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய அதிகாரிகள் உடனடியாக மணியம்மை நகர் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். குடிநீரில் கழிவுநீர் கலக்கும் பிரச்னையைக் கண்டறிந்து நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மேலும், மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர் நேரில் வந்து மக்களின் குறைகளைக் கேட்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை

இனியும் அதிகாரிகள் அலட்சியம் காட்டினால், இதைவிடப் பெரிய அளவில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என மணியம்மை நகர் குடியிருப்புவாசிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

No drinking water for a month! Residents of Maniyammai Nagar in Perambur stage a road blockade with empty pots—where are the Mayor and the Councilor?

புழல் மத்திய சிறைக்குள் உள்ளாடையில் மறைத்து போதைப்பொருள் கடத்தல்: செவிலியர் உதவியாளர் கைது