இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இரு முறை முன்னேறியும் ஒரு முறைகூட கோப்பையை வெல்லவில்லை. அடுத்தாண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதும் தற்போது சவாலாகவே உள்ளது.
நியூசிலாந்துடனான டெஸ்ட்:
இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நடக்கும் டெஸ்ட் போட்டித் தொடரில் நாளை முதல் விளையாடுகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு டெஸ்ட் தொடர் சவாலானதாகவே இருக்கும். நியூசிலாந்து அணியை அவர்களது சொந்த மண்ணிலே எதிர்கொள்வது என்பது கண்டிப்பாக இந்திய அணிக்கு சவாலானதாகவே அமையும் என்று கருதப்படுகிறது.
மேட் ஹென்றி, ஜேக்கப் டஃபி, ஜேமிசன், நாதன் ஸ்மித், டிக்னெர், ஃபாக்ஸ்கிராஃப்ட், ரச்சின் ரவீந்திரா என அவர்களின் பந்துவீச்சு பட்டாளம் மிகவும் வலுவாக உள்ளது. சான்ட்னர் இல்லாதது மட்டுமே இந்தியாவிற்கு பலமாகும். மேலும், பேட்டிங்கிலும் டாம் லாதம், கான்வே, நிகோலஸ், வில் யங், மிட்செல், ரவீந்திரா, ப்ளிப்ஸ் என வலுவாக உள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி?
இந்திய அணி வலுவான நியூசிலாந்தை இரண்டு டெஸ்ட் போட்டியிலும் தோற்கடித்தால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனென்றால், இந்திய அணி இன்னும் 7 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக ஆட உள்ளது.
அந்த 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா இறுதிப்போட்டிக்குச் செல்வது எளிதாக அமையும். ஆனால், 7 போட்டிகளிலும் வெல்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால், இரண்டு போட்டிகள் நியூசிலாந்துடன் நடைபெற உள்ள நிலையில், எஞ்சிய போட்டிகள் ஆஸ்திரேலியாவுடன் நடைபெற உள்ளது.
கசப்பான அனுபவம்:
இதில் வெறும் 5 டெஸ்ட் போட்டிகளே அல்லது அதற்கும் குறைவாகவோ வென்றாலோ இந்தியாவின் இறுதிப்போட்டி வாய்ப்பு என்பது கனவாகத்தான் மாறிவிடும். கடந்த முறை இந்திய அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தபோது இதே நியூசிலாந்து அணி இந்தியா வந்தபோது 3-0 என்ற கணக்கில் மொத்த டெஸ்டையும் இந்தியா தாரை வார்த்தது இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கனவை தகர்த்ததுடன் ரோகித் சர்மா, விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்தது என்றே கூறலாம்.
இந்திய வீரர்கள் எப்படி?
அதே நியூசிலாந்தை தற்போது அவர்கள் மண்ணில் வீழ்த்துவதற்கு இந்தியாவிற்கு அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. நாளை தொடங்க உள்ள இந்த போட்டியில் சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணியில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், ரிஷப்பண்ட், துருவ் ஜுரல், ஜடேஜா, சாய் சுதர்சன் என பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. இவர்களில் கே.எல்.ராகுல், ஜடேஜா, சுப்மன்கில் தவிர மற்றவர்களுக்கு வெளிநாட்டு அனுபவம் குறைவாக இருந்தாலும் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை பும்ரா மிகப்பெரிய நம்பிக்கையாக உள்ளார். அவருடன் முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அன்சுல் கம்போஜ், குர்னூர் ப்ரார் உள்ளனர். இவர்களில் பும்ரா, சிராஜுடன் இணைந்து ப்ளேயிங் லெவனில் ஆடும் வேகப்பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்வி உள்ளது. சுழலில் ஜடேஜாவிற்கு ஒத்துழைப்பு அளிக்கப்போவது யார்? அல்லது அவர் மட்டும்தானா? என்பது மைதானத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
இந்திய அணியில் இளம் வீரர்கள் பலரும் இருப்பதால் அவர்களுக்கு இந்த தொடர் ஒரு நல்ல பாடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

