திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று (நவ. 10) காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
சஷ்டி விரதம் இருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது கந்த சஷ்டி விரதத்தை இன்று தொடங்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் 7 நாள்கள் கொண்டாடப்படும் கந்தசஷ்டி விழாவானது நடப்பு ஆண்டிற்கான விழா, இன்று காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
இதனையொட்டி காலை 8.30 மணிக்கு அனுக்கை பூஜை, துவங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று, காலை உற்சவர் சன்னதியில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, சண்முகர் சன்னதியில் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானை, உற்சவ நம்பியார்க்கும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 9 மணிக்கு கோயில் கம்பத்தடி மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் பக்தர்களுக்கு காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்புக் கட்டிய பக்தர்கள் பால், மிளகு, துளசி ஆகியவற்றை ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு வருவர்.
காப்புக் கட்டிய பக்தர்கள் தினமும் காலை, மாலை சரவணப்பொய்கையில் நீராடி கிரிவலம் வருவர். விழாவையொட்டி தினமும் சண்முகருக்கு பகல் 11 மணிக்கும், மாலை 6 மணிக்கும் சண்முகார்ச்சனை நடைபெறும். தினமும் தந்தத் தொட்டி விடையாத்தி சப்பரத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தை 6 முறை வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாளிப்பார்.
இதேபோல வரும் 16 ஆம் தேதி வரை சுவாமி உற்சவர் சன்னதியிலிருந்து திருவாச்சி மண்டபத்தில் தந்தத்தொட்டி சப்பரத்தில் எழுந்தருள்வார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வேல்வாங்கும் நிகழ்ச்சி வரும் 14 ம் தேதி இரவு 6.30 மணியிலிருந்து 7.30 மணிக்குள் நடைபெறுகின்றது. மறுநாள் 15 ம் தேதி மாலை 6.30 மணிக்கு சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயில் முன் சூரசம்ஹாரம் நடைபெறும்..

விழாவின் 7 ம் நாள் நிகழ்ச்சியாக 16ம் தேதி காலை 9 மணிக்கு சிறிய சட்டத் தேரோட்டமும், மாலை 3 மணியளவில் பாவாடை தரிசனமும் நடைபெறும்.
மதுரை பகுதியில் சஷ்டி விரதமிருக்கும் பக்தர்கள் 7 நாள்களும் திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்திலேயே தங்கியிருந்து பூஜைகளில் பங்கேற்பர். மேலும், கோயிலுக்குள் பக்தர்கள் வசதிக்காக தொலைக்காட்சி பெட்டிகள் மூலம் பூஜை நிகழ்ச்சிகள் நேரடி காட்சிகளாக ஒளிபரப்பு செய்யப்படும்.
கோவில் சார்பில் பக்தர்களுக்கு தங்க வசதியாக கோவில் வளாகத்தில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாநகராட்சி சார்பில் கோயில் வாசல் முன்பு மற்றும் மலைக்கு பின்புரம் குடிநீர் வசதியும், நடமாடும் கழிப்பறை வசதியும் செய்யப்பட்டு உள்ளது . விழா ஏற்பாடுகளை துணை ஆணையர் செல்வி தலைமையின் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
ஒரே நாளில் இரு திருவிழாக்கள்: கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவுநாளான 16 ஆம் தேதி திங்கள்கிழமை கார்த்திகை தீபத்திருவிழாவிற்காண கொடியேற்றம் காலை 7 மணிக்கு நடைபெறுகின்றது.

