வங்கக்கடலில் 12-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகி தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி புயல் சின்னம் வருகிறது. இது 19-ந் தேதி தமிழகத்தையொட்டிய பகுதிகளில் கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது.

பருவமழை

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. கடந்த மாதம் (அக்டோபர்) 1-ந்தேதி முதல் நேற்று வரையிலான நிலவரபடி, தமிழ்நாடு, புதுச்சேரியில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவான 24.3 செ.மீ.ஐ விட 4 சதவீதம் அதிகமாக அதாவது 25.4 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்தும் மழைக்கான சூழல் இருக்கிறது.

அந்தவகையில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வரும் நிலையில், இன்றும் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

புயலாக வலுபெற வாய்ப்பு

இதன் தொடர்ச்சியாக 12-ந்தேதி (நாளை மறுதினம்) தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது படிப்படியாக வலுவடைந்து தாழ்வு மண்டலமாக வருகிற 15-ந்தேதி இலங்கையையொட்டிய வங்கக்கடல் பகுதிக்கு வந்து நிற்க வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பின்னர் மேலும் வலுபெற்று தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் 'டெல்டா வெதர்மேன்' ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு புயலாகவும் மாற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது தமிழகத்தை நோக்கி மழையை சுமந்தபடி பயணித்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற 15-ந்தேதியில் இருந்து மழைக்கான சூழல் தொடங்குகிறது. 20-ந்தேதி வரை தமிழ்நாட்டில் நல்ல மழை இருக்கும். புயலாக மாறும் பட்சத்தில் அது தமிழக பகுதிகளில் 19-ந்தேதியோ அதற்கடுத்த நாட்களிலோ கரையை கடக்க வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.