சென்னை,

6,574 காலிப் பணியிடங்களுக்கு 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஒரு இடத்துக்கு 226 பேர் போட்டியாளர்களாக உள்ளனர்.

குரூப்-4 பணிகள்

2026-ம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் ஆண்டு அட்டவணையில் குரூப்-4 பணியிடங்களுக்கான அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டது, அதன்படி. 291 கிராம நிர்வாக அலுவலர், 3,798 இளநிலை உதவியாளர், 107 வரி வசூலிப்பவர், 97 வரி தண்டலர், 1,572 தட்டச்சர் 404 சுருக்கெழுத்து தட்டச்சர், 60 நேர்முக எழுத்தர், 40 வனக் காவலர் மற்றும் முதுநிலை ஆய்வக உதவியாளர், பதிவுறு எழுத்தர், விற்பனை உதவியாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் ஆகிய பதவிகளில் மொத்தம் 6 ஆயிரத்து 574 காலி இடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. கடந்த மாதம் 6-ந்தேதி வெளியிட்டு, அதற்கான விண்ணப்பப் பதிவையும் தொடங்கியது.

14.89 லட்சம் பேர் விண்ணப்பம்

விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக கடந்த 5-ந்தேதி முதலில் அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க உச்ச வயது வரம்பை அரசு அதிகரித்ததால், அந்த பயனர்களும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்க ஏதுவாக கடைசி தேதியை 8-ந்தேதியாக மாற்றி டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பை வெளியிட்டது.

மொத்தம் 6,574 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த சூழலில், 14 லட்சத்து 89 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதாவது, ஒரு பணியிடத்துக்கு 226 பேர் போட்டியாளர்களாக தற்போது நிற்கிறார்கள். கடந்த 4-ந்தேதி வரையிலான நிலவரப்படி, 9.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து 4 நாட்களில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருக்கின்றனர்.

ஜனவரி 10-ந் தேதி தேர்வு

விண்ணப்பப் பதிவு நிறைவு பெற்றுவிட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் திருத்தங்களை மேற்கொள்ள வருகிற 11-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கான எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு (2027) ஜனவரி 10-ந் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற இருக்கிறது.