தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பட்டாசுக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி 600 தூய்மைப் பணியாளர்கள், 350 வாகனங்கள் மற்றும் 30 ஆயிரம் பிரத்யேக பைகளை பயன்படுத்தி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வீட்டுக் குப்பைகளுடன் பட்டாசுக் கழிவுகளை சேர்க்காமல் தனியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி தீவிரபடுத்தியுள்ளது.

அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கியுள்ள பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தூய்மைப் பணியாளர்கள்

சென்னை மாநகராட்சி சார்பில் பட்டாசுக் கழிவுகளைச் சேகரித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்காக 600 தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 350 வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரிப்பதற்காக 50 கிலோ கொள்ளளவு கொண்ட 30 ஆயிரம் பிரத்யேக பைகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சாலைகள், தெருக்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் தேங்கியுள்ள பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களிலும் இயந்திரங்கள் மூலமாகவும் தூய்மைப் பணியாளர்கள் மூலமாகவும் சிறப்புத் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டாசுக் கழிவுகள்

கடந்த ஆண்டு தீபாவளியின்போது மூன்று நாட்களில் 200 டன்னுக்கும் அதிகமான பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டில் சுமார் 600 டன் பட்டாசுக் கழிவுகள் சேரும் என மாநகராட்சி எதிர்பார்க்கிறது.

இதனிடையே, பொதுமக்கள் பட்டாசுக் கழிவுகளை வீட்டுக் குப்பைகளுடன் சேர்க்காமல் தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களில் கொட்டக்கூடாது என்றும் மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னையைத் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் வகையில் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் தீபாவளி பட்டாசுக் கழிவுகள் சேகரிப்பு தொடர்பாக ஒப்பிடும்போது... தீபாவளி கொண்டாட்டத்தின் மறுபக்கமாக சென்னையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் பட்டாசுக் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

கடந்த 5 ஆண்டுகளில் பட்டாசு கழிவுகள் சேகரிப்பு ஓர் பார்வை

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சென்னையில் 1,100 டன்னுக்கும் அதிகமான பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

2021-ல் 138 டன்னாக இருந்த பட்டாசுக் கழிவுகள், 2022-ல் 211 டன்னாகவும், 2023-ல் 210 டன்னாகவும் பதிவாகியுள்ளன.

2024-ம் ஆண்டு அதிகபட்சமாக 319 டன் பட்டாசுக் கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், 2025-ம் ஆண்டு 225 டன்னாகக் குறைந்தது

பட்டாசுக் கழிவுகளில் உள்ள வெடிமருந்து எச்சங்கள், ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை மற்ற குப்பைகளுடன் கலப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் பட்டாசுக் கழிவுகளைத் தனியாகச் சேகரித்து, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகள் மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.