தேனி,

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தேனி மாவட்டம் கும்பக்கரை அருவிக்கு வரும் நீர்வரத்து திடீரென அதிகரித்து, வெள்ளம் சீறிப்பாய்ந்து வருகிறது.

வெள்ளப்பெருக்கு

கொடைக்கானல் மலை அடிவாரம் வட்டக்கானல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழையால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வருகிறது. இதனிடையே நேற்று கொடைக்கானல் மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்தது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

தீபாவளி பண்டிகையை விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு குளிக்க வந்திருந்தனர். ஆனால் வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

2-வது நாளாக தடை

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு இன்னும் குறையாததால் கும்பக்கரை அருவியில் குளிக்க 2-வது நாளாக இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறுநாளான இன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.