இன்சோம்னியாக் கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள ‘மார்வெல்ஸ் வோல்வரின்’ கேம், வெளியாகி 50 நாட்களில் 2.4 மில்லியன் (24 லட்சம்) பிரதிகள் விற்பனையாகியுள்ளது. சோனியின் கேமிங் பிரிவு வருவாய் 9% அதிகரித்து $7.64 பில்லியனை எட்டியுள்ளது.

பிரபல வீடியோ கேம் தயாரிப்பு நிறுவனமான இன்சோம்னியாக் கேம்ஸ் உருவாக்கி, சோனி இன்டராக்டிவ் என்டர்டெயின்மென்ட் வெளியிட்டு உள்ள மார்வெல்ஸ் வோல்வரின் (Marvel's Wolverine) கேம், அறிமுகமான 50 நாட்களில் 24 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அடுத்த தலைமுறை கேமிங் கன்சோலான 'பிளேஸ்டேஷன் 6' (PS6) தொடர்பான பணிகளை அடுத்த நிதியாண்டில் தீவிரப்படுத்த உள்ளதாகவும் சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

செப்டம்பரில் வெளியான இந்த சூப்பர் ஹீரோ ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் கேம், வெளியான தொடக்கத்திலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் கடந்த பத்தாண்டுகளில் இன்சோம்னியாக் கேம்ஸ் நிறுவனத்தின் மிகக் குறைந்த மதிப்பீட்டைப் (lowest-rated) பெற்ற கேமாக இது அமைந்ததோடு, இதன் விற்பனை வேகமும் சற்றே மந்தமாகவே காணப்படுகிறது.

வியாழக்கிழமை நடந்த 2026-ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டு (Q2 FY 2026) நிதிநிலை முடிவுகள் குறித்த மாநாட்டில், 'மார்வெல்ஸ் வோல்வரின்' கேமின் விற்பனை விவரத்தை சோனி நிறுவனம் வெளியிட்டது. முந்தைய சாதனைகளுடன் ஒப்பிடுகையில், இன்சோம்னியாக் நிறுவனத்தின் முந்தைய வெளியீடான 'மார்வெல்ஸ் ஸ்பைடர் மேன் 2' வெளியான முதல் நாளிலேயே 25 லட்சம் பிரதிகள் விற்பனையாகி, பிளேஸ்டேஷன் வரலாற்றிலேயே மிக வேகமாக விற்பனையான கேம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஸ்பைடர் மேன் விளையாட்டைப் போல ஓபன் வேர்ல்டு அமைப்பாக இல்லாமல், 'மார்வெல்ஸ் வோல்வரின்' நேரடி கதைக்களத்தைக் கொண்ட சாகச விளையாட்டாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வோல்வரின் மற்றும் அவரது பிற மியூட்டன்ட் சகாக்கள் இணைந்து உலகிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வது போன்று கதை நகர்கிறது.

வோல்வரின் விற்பனை மிதமாக இருந்தபோதிலும், 2026 நிதியாண்டின் 2-ம் காலாண்டில் சோனியின் கேம்ஸ் அண்ட் நெட்வொர்க் சர்வீசஸ் பிரிவின் வளர்ச்சிக்கு இக்கேம் கணிசமாக உதவியுள்ளது. இப்பிரிவின் விற்பனை கடந்த ஆண்டை விட 9% அதிகரித்து, 1,208.5 பில்லியன் ஜப்பானிய யென்களை (சுமார் $7.64 பில்லியன்) எட்டியுள்ளது.

மேலும், நடப்பு நிதியாண்டுக்கான தனது மொத்த விற்பனை கணிப்பை 4,830 பில்லியன் யென்களாக (சுமார் $30.5 பில்லியன்) சோனி உயர்த்தியுள்ளது. கடந்த ஜூலை மாதக் கணிப்பை விட 6 சதவீதம் அதிகமாகும். மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் கேம் மென்பொருட்கள் (Non-first-party game software) அதிகளவில் விற்பனையானதே இதற்கு முக்கியக் காரணமாகும். குறிப்பாக, பிளேஸ்டேஷனின் வணிகத்தை மேலும் பல மடங்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படும் ‘கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ 6’ (GTA 6) கேம் அறிமுகமாவதற்கு முன்னதாகவே இந்த விற்பனைக் கணிப்பு உயர்த்தப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

2-ம் காலாண்டில் சோனி நிறுவனம் 26 லட்சம் PS5 கன்சோல்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மாதாந்திர பிளேஸ்டேஷன் பயனர்களின் எண்ணிக்கை 12.7 கோடியாக (127 மில்லியன்) உயர்ந்துள்ளது. கன்சோல் ஆயுட்கால சுழற்சியின் இந்த காலகட்டத்தில் PS5 கன்சோலின் விற்பனை இயல்பாகவே படிப்படியாகக் குறைந்து வருவதாக சோனி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், அடுத்த தலைமுறை கன்சோலான 'PS6' பணிகளில் அடுத்த நிதியாண்டில் உறுதியான முன்னேற்றத்தை எட்ட திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து லின் தாவோ மேலும் கூறுகையில், கன்சோல் ஆயுட்காலத்தின் இந்த கட்டத்தில் எதிர்பார்த்தபடியே புதிய PS5 யூனிட் விற்பனை படிப்படியாகக் குறைந்தாலும், பிளேஸ்டேஷன் தளம் நிலையான முறையில் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அடுத்த நிதியாண்டை எதிர்நோக்கி, சக்திவாய்ந்த கேம்களை வெளியிடுவதன் மூலமும் எங்களின் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலமும் பயனர் ஈடுபாட்டை அதிகரித்து, வருவாயை வலுப்படுத்த இலக்கு வைத்துள்ளோம். அதே நேரத்தில், அடுத்த தலைமுறை பிளாட்ஃபார்மிற்கான (PS6) தயாரிப்புப் பணிகளிலும் உறுதியான முன்னேற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம் என்றார். இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம், அடுத்த ஆண்டு சோனி நிறுவனம் தனது அடுத்த தலைமுறை பிளேஸ்டேஷன் 6 (PS6) கன்சோல் தொடர்பான திட்டங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.