ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தமிழக கடல் பகுதி வழியாக சட்டவிரோதமாக படகில் வந்த இளைஞர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துகால் பகுதியில் நேற்று அதிகாலை க்யூ பிரிவு, மண்டபம் மெரைன் போலீஸார் இணைந்து கடலோரக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டுப் படகு மூலம் சட்டவிரோதமாக ஊடுருவிய வவுனியாவைச் சேர்ந்த கனிஸ்டன் (20), அவரை வரவேற்க அப்பகுதியில் காத்திருந்த அவரது அண்ணன் துஷ்யந்தன் (33) ஆகிய இருவரும் பிடிபட்டனர்.
விசாரணையில், துஷ்யந்தன் ஒட்டன்சத்திரம் தாலுகா விருப்பாச்சி பகுதியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், கனிஸ்டனுக்கு இலங்கையில் வழக்கு நிலுவையில் இருப்பதால் விமானம் மூலம் தமிழகம் வர முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், இதனால் கடல் வழியாக பாம்பன் வந்ததும் தெரிய வந்தது.
கனிஸ்டனை இலங்கையிலிருந்து அழைத்து வர துஷ்யந்தன் படகுக் கூலியாக ரூ.40,000-த்தை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த கெவின் ராஜ் என்பவருக்கு வழங்கி உள்ளார். அவருக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த போலக் என்பவரும் வந்ததாகவும் துஷ்யந்தன் விசாரணையில் தெரிவித்தார். கனிஸ்டன், துஷ்யந்தன், அவருக்கு உதவிய கெவின் ராஜ் (33), போலக் (26) ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் படகிலிருந்து தப்பிய இரு படகோட்டிகளைத் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் மலைச்சாலையில் 12 மீட்டர் நீள வாகனங்களுக்கு தடை