வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே, காஜல் அகர்வால், ஷோபனா, ரகுல் ப்ரீத்தி சிங், விவேக் ஓபராய் என பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
ராமாயண இதிகாசம் இந்துக்களின் ஆன்மீக உணர்வோடு தொடர்புடையது. பல்வேறு காலகட்டங்களில் திரைப்படங்களாக, நெடுந்தொடர்களாக, காமிக்ஸ் கதைகளாக, இன்னும் பல வடிவங்களில் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் தற்போது அதிநவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச அளவில் கவனம் பெரும் வகையில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்களிப்போடு இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இத்திரைப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய்பல்லவி, ராவணனாக யஷ், அர்ஜுனனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ரகுல் பிரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளனர். திரைப்படம் தொடங்கும் போது தேவர்கள் குறித்தும், அசுரர்கள் குறித்தும், அவர்களுக்கு இடையேயான மோதல் குறித்தும் பின்னணி குரலோடு காட்சிகள் விரிகின்றன. தொடக்கத்திலேயே பிரம்மிக்கத்தக்க திரை காட்சிகளால் பார்வையாளர்களை ஆக்கிரமிக்கிறது ராமாயணம். முதல் அறிமுகமாக ராவணனின் வரவு அதிரடி வில்லனுக்கான அம்சங்களைத் தாங்கி இருக்கிறது. வரம் பெற தியானம் செய்வது தொடங்கி தேவர்களை வதம் செய்வது வரை மிரட்டலான அதிரடியான நடிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார் யஷ். ராவணனின் கதாபாத்திரத்திற்கு அப்படியே பொருந்தியிருக்கிறது அவரது உடல் மொழி. ஆணவம், வீரம், செருக்கு என ஒட்டுமொத்த கதாபாத்திரத்திற்கான உடல் மொழியை கச்சிதமாக கொடுத்திருக்கிறார்.
ராமனாக வரும் ரன்பீர் நடிப்பு சாந்தமும் பொறுமையும் கொண்டிருக்கின்றன. நிதானமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ரன்பீர். அர்ஜுனன், சீதையைக் காப்பாற்ற வில் அம்பு கொண்டு அவர் போடும் சண்டைகள் ராமனாக அவரது கதாபாத்திரத்தைத் தூக்கி நிறுத்துகிறது. சீதையை மீட்க அவர் எடுக்கும் சபதம் அடுத்த பாகத்திற்கான ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
சீதையாக இருக்கும் சாய் பல்லவி, கதாபாத்திரத்தின் ஆழம் அறிந்து நடத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அமைதியாக இல்லாமல் அதிரடி காட்டி இருக்கும் அவர் அதே நேரம் ராவணன் கடத்திச் செல்லும்போது கண்களில் தவிப்பை தாங்கிப் பிடித்து ஸ்கோர் செய்கிறார்.
இவர்களுக்கு மத்தியில் நக்கலும் நையாண்டியும் கொண்ட அர்ஜுனனின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் ரவி துபே. ராமனுக்கு கட்டுப்பட்டவராக இருந்தாலும் அவரது நகைச்சுவை வசனங்கள் ரசிக்கச் செய்கின்றன. ராமனை மீறிய உடற்கட்டு அவர் மீதான வசீகரத்தை அதிகரிக்கிறது.
இத்துடன் ரகுல் பிரீத்தி சிங், ஷோபனா, அருண் கோவில், ஷீபா சத்தா, குணால் கபூர் சிஷீர் ஷர்மா என துணை கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

நடிப்பு என்பதைத் தாண்டி படத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை தொழில்நுட்ப அம்சங்கள். ஏற்கெனவே பழக்கப்பட்ட கதையை விறுவிறுப்பு குறையாமல் கொடுக்கும் அதே சமயம் அதை தரமாக கொடுக்க வேண்டியது அவசியம். அதை ராமாயணம் படக்குழு மிக நேர்த்தியாக செய்திருக்கிறது.
படம் தொடங்கும் போது வரும் பின்னணி இசை இறுதிவரை மிரட்டலாக அமைந்திருக்கின்றன. புகழ்பெற்ற ஹேன்சிமரின் இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. நல்ல ஒலி அமைப்பு, ஐ மேக்ஸ் திரைகளில் ராமாயணம் ஒரு நல்ல திரை அனுபவத்தை கொடுக்கலாம்.
நேரடித் தமிழ் திரைப்படம் இல்லை என்பதால் உதட்டு அசைவை கூடுமானவரை சரியாக கொடுத்திருக்கிறது படக்குழு. சில காட்சிகளில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக தமிழில் உருவானதை போன்றே அமைந்திருப்பது படத்திற்கு பெரும் பலம். தமிழ் வசனங்கள் சரியாக எழுதப்பட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டியது. ராவணனின் பாடல் சிறப்பாக இருக்கிறது. கேட்க கேட்கத்தான் பிடிக்கும் வகையில் ரகுமானின் இசை.
ராமன் வனவாசம் செல்லும் வரை சற்று மெதுவாக செல்கிறது திரைக்கதை. மனித உடல்களோடு மெகா சைஸ் அரக்கர்கள் வரும் காட்சிகள் அதன் வேறுபாட்டை திரையில் காட்டத்தான் செய்கின்றன. ராமன் வனவாசம் செல்லும் வரை மெகா சீரியல் யோசனை வரத்தான் செய்கிறது.
எனினும் காட்சி அனுபவமாக ராவணனின் வரம் கேட்கும் படலம், தனது மனசாட்சியுடன் பேசி 10 தலைகள் தோன்றும் ராவணனின் காட்சிகள், சீதை மற்றும் அர்ஜுனனுக்காக வில் அம்பு கொண்டு ராமன் போரிடும் தருணங்கள், புஷ்பக விமானத்தில் சீதை கடத்தப்படுவதில் ஜடாயுவின் சண்டை, ராமனின் சபதம் ஆகிய இடங்களில் பின்னணி இசை, சரியான கிராபிக்ஸ் காட்சிகள் என அட்டகாசமான அனுபவம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சீதை ராவணனால் கடத்திச் செல்லப்படுவதுடன் முதல் பாகம் நிறைவடைகிறது.
பழைய கதை புதிய தொழில்நுட்பம் நல்ல திரை அனுபவத்திற்கு வாய்ப்பளித்திருக்கிறது.

