சென்னை,

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் முதல்-அமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம் சுமார் 300 மீட்டர் தொலைவில் வழக்கம்போல் பொதுமக்கள் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அரசு குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து குழந்தையை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்றது யார்? எதற்காக குழந்தையை அங்கு விட்டுச் சென்றனர்? என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.