பனாஜி,

விவாகரத்துகளை குறைக்க ஆரோக்கியமான, நீடித்த திருமண பந்தங்களுக்கு தயாராவதற்கான சான்றிதழ் படிப்பை கோவா மனையியல் கல்லூரி அறிமுகப்படுத்தி உள்ளது.

விவாகரத்து அதிகரிப்பு

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். ஆனால் தற்போது இந்தியாவில் விவாகரத்துகள் (திருமண முறிவுகள்) அதிகரித்து வருவது கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது. கிராமப்புறங்களுடன் ஒப்பிடும்போது டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகர பகுதிகளில் விவாகரத்து வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளில் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. சென்னையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக கோர்ட்டு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்புகள், ஏமாற்றம், சிக்கல்

திருமண வாழ்க்கை மிக சரியாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்முடைய எதிர்பார்ப்புகள் மற்றும் கனவுகளுக்கு பொருந்தாத விஷயங்கள் திருமண உறவில் இருக்கும் போது ஏமாற்றம் அடைந்து வாழ்க்கை துணையாக வந்தவரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்குகிறோம். இதுவே சிக்கலாகி விடுகிறது.

15 நாள் பயிற்சி வகுப்பு

இந்த நிலையில் திருமண உறவுகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் அந்த உறவுகளை இன்னும் பலப்படுத்த எப்படி கையாள்வது என்பது குறித்த 15 நாள் பயிற்சி வகுப்புக்கான சான்றிதழ் படிப்பை கோவா மாநிலத்தில் கோவா மனையியல் கல்லூரி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பயிற்சியின் போது டேட்டிங்கின் நோக்கம், சுய விழிப்புணர்வு, ஆண்மை, பெண்மை மற்றும் உறவுகளில் அதன் ஆளுமையை ஆராய்தல், மண வாழ்க்கை வித்தியாசத்தை புரிந்து கொள்ளுதல் போன்ற தலைப்புகளில் வகுப்புகள் நடத்தப்படும்.

கோவாவில் 3 ஆயிரம் விவாகரத்து மனுக்கள் தாக்கல்

கோவாவின் உரிமையியல் கோர்ட்டுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவாகரத்து தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2024-ம் ஆண்டில் மட்டும் 947 மனுக்கள் அடங்கும். இதனை தொடர்ந்து விவாகரத்துகளை குறைப்பதற்காக, மாநிலம் முழுவதும் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனையை அறிமுகப்படுத்த கோவா அரசு உத்தேசித்துள்ளது.

ஆரோக்கியமான உறவு

இதற்காகதான் கோவா மனையியல் கல்லூரி புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வர் மகேஷ் பாய் கூறியதாவது:

திருமணத்துக்கு தயாராதல் என்பது வெறும் திருமண சடங்குகளுக்கான ஏற்பாடுகளை மட்டும் குறிப்பதல்ல. அதையும் தாண்டி திருமண வாழ்க்கையின் புரிதல், அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புகளை உள்ளடக்கியது. ஆரோக்கியமான, நீடித்த உறவை உருவாக்க என்ன தேவை என்பதை மக்கள் ஆராய இந்த பயிற்சி உதவுகிறது. இந்த சான்றிதழ் படிப்பு, கல்லூரியின் மனித மேம்பாடு மற்றும் குடும்ப ஆய்வுகள் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது வரும் டிசம்பர் 2-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை நடைபெறும்.

ஆழமான புரிதல்

தன்னை பற்றியும், தன் துணையை பற்றியும், திருமண வாழ்க்கையின் பொறுப்புகள் பற்றியும் ஒரு புரிதல் தேவை. இந்த அம்சங்களை ஆராய்வதற்கும், ஆரோக்கியமான மற்றும் நீடித்த உறவை உருவாக்குவதற்கு என்ன தேவை என்பதை பற்றிய ஆழமான புரிதலை வளர்த்து கொள்வதற்கு இந்த பாடநெறி ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள், திருமணமாகாத இளைஞர்கள் மற்றும் ஆரோக்கியமான உறவுகளை உருவாக்கவும், திருமணத்துக்கு தயாராகவும் விரும்பும் பிற நபர்களுக்காக நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.