ஹோர்மூஸ் நீரிணையில் இந்தியக்கப்பல்களுக்கு தடையுமில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

4 நாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

ஹோர்மூஸ் நீரிணையை கடக்க இந்தியா, சீனா, கத்தாா், ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கு எவ்வித தடையும் இல்லையென ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து அதிகளவில் மருந்துப்பொருட்களை ஈரான் இறக்குமதி செய்வதன் காரணமாகவே, இச்சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் நீரிணையை இந்தியக்கப்பல்கள் கடப்பதற்கு கட்டணம் வசூலித்து வரும் ஈரான், கத்தாருக்கு முழு விலக்கு அளித்துள்ளது. இந்தியாவின் மொத்த எல்.பி.ஜி இறக்குமதியில் 90 சதவீதமும், கச்சா எண்ணெய் இறக்குமதில் 30 சதவீதமும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோர்மூஸ் நீரிணையின் முக்கியத்துவம்

ஹோர்மூஸ் நீரிணை என்பது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் மிக முக்கியமான மற்றும் குறுகலான கடல் பகுதி. இந்த நீரிணை வடக்கில் ஈரானையும் தெற்கில் ஐக்கிய அரபு அமீரகத்தையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இந்த நீரிணை குவைத்,ஈராக், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் கடல்வழி வணிகத்திற்கு இன்றியமையாததாக உள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் எல்.பி.ஜி மற்றும் கச்சா எண்ணெயை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரதான திறவு கோலாகவே இந்த நீரிணை உள்ளது. 

மத்திய கிழக்கில் ஓயாத பதற்றம் 

இஸ்ரேலை எதிர்த்து வந்த ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும், காசா முனையில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும் ஈரான் ஆதரவு அளித்து வந்ததன் காரணமாகவும், அணுசக்தி கட்டமைப்புக்காகவும் அமெரிக்க - இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து இந்த ஹோர்மூஸ் நீரிணை விவகாரம் தொடங்கியது. அப்போதிலிருந்து நீரிணையை மூடி வரும் ஈரான் தனது நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே ஹோர்மூசை கடக்க அனுமதியளித்து வருகிறது.