சென்னை: அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்காமல், நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். முன்னதாக, அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.
கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சல் நோயாளிகளை கண்காணித்து, உடனடி நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மருந்துகள் தயார் நிலையில் உள்ளன.
அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் வாங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருப்பதாக புகார்கள் வந்துள்ளன. பொதுவாக காலை 8 மணியில் இருந்து, காலை 10 மணிக்குள் பெரும்பாலான நோயாளிகள் மருந்து மாத்திரைகள் வாங்க வருவதால் கூட்டம் அதிகரித்து, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி “நலம் ஏ ஐ” என்ற புதிய ஒரு செயலியை உருவாக்கி உள்ளோம். பயனாளிகள் அந்த செயலியை பயன்படுத்தி, மாத்திரை, மருந்துகளை வாங்கும் நேரங்களைக் குறிப்பிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இதனால் ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக கூட்டம் குவிந்து, தாமதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படும். பயனாளிகள், குறிப்பிடப்பட்ட நேரங்களில், வந்து மாத்திரை, மருந்துகளை வாங்கி செல்லலாம்.
இந்த முறை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளது. தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனையை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றுவதற்கான திட்டம், பரிசீலனையில் உள்ளது. அதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து, முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் இருந்து 2027 மார்ச்சில் முதல் ராக்கெட்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்
