சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்விஎஸ்-03 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுக் கடிகாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் மகத்தான சாதனையாகும்.
இதில் உள்ள நேவிக் அமைப்பு நாட்டின் ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நேரலையில் கண்காணிக்கும் பொது பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள 1500 கிமீ பரப்பளவுக்கு வழிகாட்டுதல் சேவையையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ தலைமைக்கும், விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இஸ்ரோவை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மகத்தான பங்கை செலுத்திய விஞ்ஞானிகள் விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்றோரின் கனவுகள் மெய்ப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியையும், ராக்கெட் ஏவுதலையும் இந்திய அரசு தனியார் மயமாக்குவது கண்டனத்துக்குரியது. இதற்கு பதிலாக இஸ்ரோவை மேலும் வலுப்படுத்த வேண்டும். இஸ்ரோவுக்கு தேவையான நிதி உதவி உட்பட அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நலம் ஏஐ செயலி மூலம் முன்பதிவு செய்து மருந்துகள் வாங்கும் முறை விரைவில் அறிமுகம் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்
