எவ்வித பரபரப்பும் இன்றி, வெகு அமைதியாக, நேர்த்தியாக குரூப்-2 முதல்நிலைத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. வினாத்தாளில் அச்சுப்பிழை, எழுத்துப்பிழை, கருத்துப் பிழை அநேகமாக அறவே இல்லை. இதற்காக ஆணையம் தனி கவனம் செலுத்தி செயல்பட்டிருப்பது நன்கு தெரிகிறது. பாராட்டுகள்.
பொது அறிவுப் பிரிவு, பொதுத் தமிழ்ப் பிரிவு என்று இரண்டிலும் வினாக்கள் எளிதாகவே இருந்தன. பெரிய அளவில் சிக்கலோ, சவாலோ கொண்டிராத நேரடி கேள்விகள் நிரம்பி இருந்தன. பொதுப் பாடப் பிரிவில் ஒரு குறிப்பிட்ட சிந்தாந்தம் சார்ந்த தமிழக அரசியல் வினாக்கள் அதிகம் இருந்தன. அறிவியல், நிலவியல், சுற்றுச்சூழல், கணினி தொழில்நுட்பம், சர்வதேச நடப்புகள்... இன்னும் பிற அறிவுசார் தளங்களில் இருந்து இந்த வினாத்தாள் விலகி இருப்பதாக ஓர் உணர்வு ஏற்படத்தான் செய்கிறது.
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் ‘நடுநிலைமை’ வழுவிவிட்டதோ? ‘பரந்துபட்ட அறிவுத்திறன்’ சரியாக சோதிக்கப்படவில்லையோ? என்ற எண்ணம் எழுகிறது. நிச்சயம் தவிர்க்கப்பட்டு இருக்கலாம். பொதுப் பாடப் பிரிவில், புற்றுநோய் தீர்க்கும் ‘ஹைட்ரோஜெல்’ மருந்து, IUBMB என்ஸைம், ‘டிஜிட்டல் ஸ்கை ப்ளாட்பார்ம்’, ‘ஒமேகா பிளாக்’, தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணையம், லோக்பால் - லோக்ஆயுக்தா, பொதுக் கணக்கு குழு, பஞ்சாயத்துகளின் அதிகாரம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர்... அறிவுத் தேடலில் முழுமையாக ஈடுபட்ட தேர்வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.
மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றுள்ளன. விளையாட்டுத் துறையில், 2025 FIDE சதுரங்கப் போட்டி பற்றிய ஒரு கேள்வி தவிர்த்து வேறு இல்லை என்பது ஏமாற்றம் தருகிறது.
பொருளாதாரம், பொது சுகாதாரம், வர்த்தகம், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல துறைகள் அநேகமாக அறவே இடம்பெறவில்லை. சட்டம், நீதி - தகுந்த முக்கியத்துவம் பெற்று இருக்கிறது.
சில வினாக்கள் வடிவமைக்கப்பட்ட விதம், அவை வலியுறுத்தும் ‘கருத்துரு’ வியப்பளிக்கின்றன. ஒரு கேள்வி இப்படிக் கூறுகிறது: ‘மாநில அளவில் ஓர் அமைச்சர், முதலமைச்சரின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை பதவியில் நீடிக்கிறார். ஒரு அமைச்சருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், முதல்வர் அவரைப் பதவி விலகும்படி கேட்கலாம்; அல்லது, அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு ஆளுநருக்கு அறிவுறுத்தலாம்.’ தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு கேட்கப்பட்டதாய் ஒரு தோற்றம் ஏற்படுவதைத் தவிர்த்து இருக்கலாம்.
மற்றொரு கேள்வி - ‘நமது அரசியலமைப்பு பிரிவுகளில் எது இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையை வெளிப்படுத்தவில்லை?’ இக்கேள்வி, நமது சாசனத்தின் பாகம் III - ‘அடிப்படை உரிமைகள்’ பகுதியில் உள்ள பிரிவு 28 (2)ஐ விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. மிக உறுதியாய் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
இன்னும் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து விரிவாக எழுதினால் இந்தக் கட்டுரை திசைமாறிப் போய்விடலாம். மீண்டும், ‘தவிர்க்கப்பட்டு இருக்கலாம்’ என்பதே போதுமானது.
தேர்வின் இரண்டாம் தாள், தமிழ்வழிக் கல்வி பயின்ற தேர்வர்களுக்கு மிக எளிது. ஆனாலும், தமிழ் மொழி சார்ந்த சில வினாக்கள், இன்னும் நல்ல தரத்தில் அமைந்திருக்கலாம். பொதுத் தமிழ் பிரிவில் உள்ள கேள்விகள் பல தமிழின் மாண்பை உயர்த்துவதாக இல்லை. கேள்விகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். மேலும், ‘பொது ஆங்கிலம்’ வினாக்களைவிட, பொதுத் தமிழ் வினாக்கள் கடினமாக இருந்ததாக ஒரு சாரார் கூறுவதையும், ‘நேரம் போதாமை’ குறையையும் தேர்வாணையம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நலம்!
8 விரைவு ரயில்கள் ‘அதிவிரைவு’ ஆக மாற்றம்: ஜன.1 முதல் எண்களும் மாறுகின்றன
