சென்னை,
"நான் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். தற்போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை." என்று அனுபமா நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகை அனுபமா
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'கொடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து பல்வேறு மொழிப் படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'பைசன்' திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் அவர் மும்முரமாக நடித்து வருகிறார்.
காதல் தோல்வி குறித்த பேச்சு
இதற்கிடையில், அனுபமா பரமேஸ்வரன் காதலில் தோல்வியடைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மனவேதனையில் இருந்து கடினமான முயற்சிக்குப் பிறகு மீண்டு வந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதுதொடர்பாக அவர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் சமீபத்தில் பகிர்ந்திருந்தார்.
கடினமான காலத்தை கடந்துவிட்டேன்
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அனுபமா பரமேஸ்வரன் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் தற்போதைய மனநிலை குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "நான் ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து வந்துவிட்டேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். தற்போது எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்துகொண்டேன். அதன் மூலம் என்னை விமர்சிப்பவர்களைத் தாண்டி, என் மீது உண்மையான அன்பு காட்டும் நல்ல உள்ளங்கள் யார் என்பதையும் தெரிந்துகொண்டேன். அத்தகைய அன்பான மனிதர்களுக்காக நான் தொடர்ந்து பயணிப்பேன்" என்றார்.

