சென்னை,
மாதம்பட்டி ரங்கராஜ் தனது மகன் ராகாவின் முதல் பிறந்தநாளை ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா
மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக கடந்த ஆண்டு ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த விவகாரம் திரையுலகிலும், சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ்தான் என்று அவர் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற சட்ட நடவடிக்கைகளின்போது, குழந்தையின் தந்தை யார் என்பதை உறுதிப்படுத்த டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதி செய்யப்பட்டது.
மகனின் பொறுப்பை ஏற்ற ரங்கராஜ்
இதையடுத்து, தனது மகன் ராகாவின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்கு முழுப் பொறுப்பேற்பதாக மாதம்பட்டி ரங்கராஜ் சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார். மேலும், மகனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து, ராகாவுக்கு மொட்டையடிக்கும் நிகழ்ச்சியிலும் மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா இருவரும் இணைந்து பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன.
முதல் பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில், தற்போது மகன் ராகாவின் முதல் பிறந்தநாளை மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவும் இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்தக் கொண்டாட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான சர்ச்சைகளுக்கு மத்தியில், மகனின் முதல் பிறந்தநாளை இருவரும் இணைந்து கொண்டாடியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

