மேட்டுப்பாளையம்,
மண் சரிவால் மலைரெயில் பாதையில் விழுந்த பாறைகளை அகற்றி சீரமைக்க பாலத்தில் பொக்லைன் எந்திரத்தை இயக்கி சென்றனர்.
மண் சரிவு
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் 23-ந் தேதி மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- குன்னூர் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதை சீரமைக்கும் பணி நடந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை 9 நாட்கள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் மழை காரணமாக அடர்லி -ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டது. ரெயில்வே உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குன்னூர் மலை ரெயில் இருப்புப் பாதை பிரிவு பொறியாளர் குமார் மேற்பார்வையில் 30-க்கும் மேற்பட்ட ரெயில்வே தொழிலாளர்கள் பல் வேறு குழுக்களாக பிரிந்து நேற்று 9-வது நாளாக ரெயில் பாதையை சீரமைக் கும் பணியில் ஈடுபட்டனர்.
ரெயில் பாலத்தில்...
பொக்லைன் எந்திரங்கள் மூலம் ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறாங்கற்கள், மரங்கள், மண் அகற்றப்பட்டது. மலைப்பாதையில் ஒரு சில இடங்களில் ரெயில் பாலத்துக்கு அருகே இருபுறமும் மண்சரிவு ஏற்பட்டிருந்தது.
ஒரு பகுதியில் ரெயில் பாதையை சீரமைத்த பின்னர் மறுபுறம் செல்வதற்காக ரெயில் பாலத்தின் மீது பொக்லைன் வாகன ஓட்டுனர் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் பாலத்தின் மீது பொக்லைனை பாதுகாப்பாக இயக்கி மறுபகுதிக்கு ஓட்டி சென்றார். அங்கு மண்சரிவு ஏற்பட்ட பகுதியை சீரமைக்கும் பணி நடந்தது.
ரெயில் சேவை ரத்து
இந்த நிலையில் நேற்று அதிகாலை பெய்த மழை காரணமாக அடர்லி-ஹீல்கு ரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டதால் தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன. அதை சீரமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
ரெயில் பாதையை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலை ரெயில் போக்குவரத்து இன்று முதல் 4-ந்தேதி வரை மீண்டும் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

