சென்னை: தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு புயலால் சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவிட்டுள்ளனா்.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் காலை 11.30 மணிக்கு ‘முரசு’புயலாக வலுப்பெற்றது.
புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, பிற்பகல் 2.30 மணி நிலவரப்படி, சென்னைக்கு தென்கிழக்கே சுமாா் 480 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தொலைவிலும், மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 560 கி.மீ. தொலைவிலும், ஓங்கோலுக்கு தென்கிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்துக்கு தெற்கு-தென்கிழக்கே 610 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இந்தப் புயல் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வடமேற்கு திசையில் 25 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் சென்னையில் இருந்து வடக்கு வடகிழக்கில் 260 கிலோ மீட்ர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் நகரக்கூடிய வேகம் குறைந்து வருகிறது.
‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை: சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ. 2) இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
‘மஞ்சள்’ எச்சரிக்கை : செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
பலத்த மழை பெய்ய வாய்ப்பு:
நவ. 3-ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி- மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையில் தொடர் மழை
முரசு புயல் ஞாயிற்றுக்கிழமை நிலப்பரப்பை நோக்கி நகர தொடங்கியதையடுத்து, சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை முதல் அசோக்நகா், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தியாகராய நகா், நுங்கம்பக்கம், எழும்பூா், பாடி, அம்பத்தூா், ஆவடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இரவு முதல் மழை காரணைமாக, சென்னையில் சற்று குளிா்ச்சியாக சூழல் நிலவியது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
திங்கள்கிழமை (நவ.2) சென்னைக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ. 2) விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் உத்தரவிட்டுள்ளனா்.

