தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாதவரத்தில் 11 மி.மீ., மழை பெய்துள்ளது.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) தெற்கு அந்தமான் கடலில் கடந்த அக். 29-ஆம் தேதி உருவானது. இந்தப் புயல் சின்னம் அக்.30-ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவியது. தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து அக்.31 காலை 11.30 மணியளவில் அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இது ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி அளவில் மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவடைந்து தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் காலை 11.30 மணிக்கு ‘முரசு’ புயலாக வலுப்பெற்றது.

புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 27 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூா் மற்றும் நரசாப்பூா் இடையே திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு முதல் நவ. 3 அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ. 2) இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச மழைப்பொழிவு

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாதவரத்தில் 11 மி.மீ., மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணூர் 10 மி.மீ., நுங்கம்பாக்கம் 8.7 மி.மீ., மற்றும் விருதுநகரில் 8.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு கிழக்கே புயல் மையம்

இதனிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள முரசு புயல் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. வட தமிழக கடற்கரையில் சென்னைக்கு கிழக்கே 200 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் சீற்றம் அதிகரிப்பு

முரசு புயல் எதிரொலியாக சென்னை நொச்சிக்குப்பம், திருவள்ளூர், செங்கல்பட்டில் பகுதியில் கடல் சீற்றம் மேலும் அதிகரித்துள்ளது. 1.4 மீட்டர் முதல் 2.1 மீட்டர் உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Where does the highest rainfall occur in Tamil Nadu?

தீவிர புயலாக வலுப்பெற்ற முரசு: சென்னை, திருவள்ளூா் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!