சென்னை: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் சவுரவ் தாஸ், நேபாளத்தை பூர்வீகமாகக் கொண்டவரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு 6 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் யோகேஷ் சர்மா என்ற சவுரவ் தாஸ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நீதித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் வகையிலும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறார்.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தையே அவமதிக்கும் செயல். சவுரவ் தாஸின் வம்சாவளி நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுவ தால் அவர் மற்றும் அவரது தாய் சீமா சேத்ரி, அவரது தந்தை பிஜய் சர்மா ஆகியோரது குடும்ப பின்னணி குறித்தும், அவர்கள் அனைவரும் உண்மையில் இந்தியர்களா என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு 6 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.
காலி பாட்டில் திட்டத்தில் பெறப்படும் தொகையை அரசுக்கு வரவு வைக்கவே மதுபானங்களின் எம்ஆர்பி விலை உயர்வு: அமைச்சர் விளக்கம்
