சென்னை: தமிழகத்தின் 5 முக்கிய ரயில் நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் மனு அளித்துள்ளார்.
டெல்லியில் மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் சந்தித்து, கோரிக்கை மனுவை வழங்கினார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் அந்த்யோதயா அதிவிரைவு ரயில் (20691/20692) பண்ருட்டியிலும், முத்துநகர் அதிவிரைவு ரயில் (12693/12694) உளுந்தூர்பேட்டையிலும், மங்களூரு சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12685/12686) குடியாத்தத்திலும், மும்பை எல்டிடி - நாகர்கோவில் விரைவு ரயில் (16351/16352) கடம்பூரிலும், சோழன் விரைவு ரயில் (22675/22676) குத்தாலத்திலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்ட 5 நகரங்களும் விவசாயம், தொழில், வணிகம், கல்வி, பொருளாதார நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகின்றன.
இப்பகுதிகளில் முக்கிய ரயில்கள் நின்று சென்றால், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் மற்றும் அன்றாடப் பயணிகள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், சுற்றுப்பகுதி மக்களின் நீண்டதூர போக்குவரத்து தேவைகளையும் எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கூடாது: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
