திருச்சி,
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் ஏற்பட்ட சிறிய சேதத்தை தொடர்ந்து, கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் பலப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீரங்கம் கோவில்
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். இந்தாண்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்தநிலையில் கடந்த 26-ந் தேதி இரவு, ஸ்ரீரங்கம் கோவிலின் மிக உயரமான 236 அடி தெற்கு ராஜகோபுரத்தின் முதல் அடுக்கில் இருந்த கொடுங்கை எனப்படும் அலங்கார கான்கிரீட் சுவரின் சிறிய பகுதி உடைந்து கீழே விழுந்தது. சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் இந்த சிமெண்டு பகுதி ஊறி இருந்ததாலும், கோபுரத்தில் குரங்குகளின் நடமாட்டம் அதிகமிருந்ததாலும் இந்த சிறிய பகுதி பலவீனமடைந்து விழுந்து இருக்கலாம் என கூறப்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கோபுரங்களை பலப்படுத்த முடிவு
இதையடுத்து இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடனடியாக ராஜகோபுரத்தை ஆய்வு செய்து, கோபுரம் முழுமையாக பாதுகாப்பாகவும், நிலையாகவும் உள்ளது என்பதை உறுதிப்படுத்தினர். இந்தநிலையில் ராஜகோபுரத்தில் ஏற்பட்ட இந்த சிறிய சேதத்தை தொடர்ந்து, ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து 21 கோபுரங்களையும் முழுமையாக பலப்படுத்தும் பணிகளை விரைவுப்படுத்த இந்துசமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.
ஒரு ஸ்தபதி மற்றும் தொல்லியல் ஆலோசகர் அடங்கிய இருநபர் குழு ஏற்கனவே ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்ட 6 முக்கிய கோபுரங்களை ஆய்வு செய்துள்ளது. இதற்கிடையே திருச்சி என்.ஐ.டி. நிபுணர்களும் 6 கோபுரங்களின் நிலைத்தன்மை குறித்த ஆய்வை முடித்துள்ளனர். இந்த கூட்டு ஆய்வு அறிக்கைகள் கோவில் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு, ஆகம விதிகளின்படியும், பாரம்பரிய கட்டிடக்கலை மாறாமலும் கோபுரங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.
நிபுணர்குழு
முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு இதேபோல் கோவிலின் கிழக்கு நுழைவுவாயிலில் உள்ள 131 அடி உயர 9 அடுக்கு தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தின் ஒரு பகுதி (கொடுங்கை) இடிந்து விழுந்து பலத்த சேதம் அடைந்தது. அப்போது சென்னை ஐ.ஐ.டி. மற்றும் திருச்சி என்.ஐ.டி. நிபுணர் குழுவின் வழிகாட்டுதலின்படி, ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் முழுமையாக பலப்படுத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் மூடப்பட்டிருந்த இந்த கிழக்கு கோபுர வாசல் வழிப்பாதை, சீரமைப்பு பணிகள் முற்றிலும் நிறைவடைந்து, கடந்த ஆகஸ்டு மாதம் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

