சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ முதல்நிலைத் தேர்வு நாளை (நவம்பர் 1-ந்தேதி) திட்டமிட்டபடி நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் எழுத உள்ளனர்.
846 காலிப்பணியிடங்கள்
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பிரிவுகளைச் சேர்ந்த 846 பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஒரு காலிப்பணியிடத்திற்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்வு மாநிலம் முழுவதும் 1,647 மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 173 தேர்வு மையங்களில் 51 ஆயிரத்து 721 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
காலை 9.30 மணிக்கு தொடக்கம்
முதல்நிலைத் தேர்வு நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் 200 கொள்குறி வகை வினாக்கள் இடம்பெறும். மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும்.
இதில் பொது அறிவு பகுதியில் 75 வினாக்களும், திறனறிவு பகுதியில் 25 வினாக்களும், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.
ஹால் டிக்கெட் கட்டாயம்
தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

