பெங்களூரு,
ரேணுகாசாமி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கார் பணிமனை ஊழியர்கள் 2 பேர் அரசு சாட்சியாக இருந்து திடீரென பிறழ்சாட்சியாக மாறினர். அவர்கள் யாரையும் பார்க்கவில்லை. தங்களுக்கு எதுவும் தெரியாது என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ரேணுகாசாமி கொலை வழக்கு
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் விசாரணை தொடங்கும் போது, தர்ஷனின் நண்பரான பிரதாப் என்பவர் அரசு சாட்சியாக மாறினார். அவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
2 பேர் பிறழ்சாட்சியாக மாறினர்
தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்றும் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது அரசு சாட்சிகளாக இருந்த 2 பேர் திடீரென பிறழ் சாட்சியாக மாறி நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தனர். இதனால் இந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம் என கருதப்படுகிறது. அதாவது, சித்ரதுர்காவில் இருந்து ரேணுகாசாமியை காரில் கடத்தி வந்து, பெங்களூரு பட்டணகெரேயில் உள்ள பழைய கார் பணிமனையில் வைத்து தான் கொடூரமாக தாக்கியும், உடலில் மின்சாரம் பாய்ச்சியும் கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணிமனையில் பணியாற்றி வந்த வாகன நிறுத்துமிட பணியாளரான மல்லிகார்ஜுன், அங்கு ஆவண சரிபார்ப்பாளராக பணியாற்றி வந்த விஜய்குமாரும் நேற்று கோர்ட்டில் வாக்கு மூலம் அளித்தனர்.
யாரையும் பார்க்கவில்லை; எதுவும் தெரியாது
அப்போது அவர்கள் திடீரென்று தர்ஷனுக்கு ஆதரவாக பிறழ்சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்தனர். முன்பு அவர்கள் போலீசில் அரசு சாட்சியாக வாக்குமூலம் அளித்து இருந்தனர். ஆனால் அவர்கள் தற்போது பிறழ்சாட்சியாக மாறினர். நேரில் பார்த்த சாட்சியான மல்லிகார்ஜுன், குற்றம் நடந்த அன்று கொட்டகையில் எதையும் பார்க்கவில்லை என்றும், அந்தச் சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி திடீரென பல்டி அடித்தார்.அதுபோல் விஜயகுமாரும், "எனக்கு எதுவும் தெரியாது. நான் அலுவலகத்தை விட்டு வெளியே வரவே இல்லை. வெளியே நடந்த சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது, நான் யாரையும் பார்க்க வில்லை," என்று தெரிவித்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
போலீசாரிடம் அளித்த வாக்குமூலங்களுக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளதால், அந்த 2 சாட்சிகளையும் எதிர் தரப்பு சாட்சிகளாகக் கருதுமாறு அரசு சிறப்பு வக்கீல் பிரசன்னகுமார் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி எதிர் தரப்பு சாட்சிகளின் குறுக்கு விசாரணைக்கு அனுமதி அளித்து, விசாரணையை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு பின்னடைவு
இதன் மூலம், கொட்டகையில் பணிபுரிந்து கொண்டிருந்த மொத்தம் நான்கு சாட்சிகளின் வாக்குமூலங்கள் தலைகீழாக மாறியுள்ளன. இதே கொலை வழக்கில் ஏற்கனவே அதே கார் பணிமனையில் பணியாற்றி வந்த புனித், கிரண், காவலாளி நரேந்திர சிங் ஆகியோரும் அரசு சாட்சியாக இருந்து திடீரென்று பிறழ்சாட்சியாக மாறி வாக்குமூலம் அளித்து உள்ளனர். அரசு சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறி வருவது இந்த வழக்கில் அரசு தரப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

