சென்னை,

திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.400 கோடி வசூலித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார், அவரது கார் டிரைவர் சரவணன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இவர்கள் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த விவகாரத்தில் பணம் வசூலித்தது யார்?, தனியார் பள்ளிகளிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டது? வசூலிக்கப்பட்ட பணம் யார், யாருக்கு வழங்கப்பட்டது? என்பது குறித்து அன்பில் மகேஷ், முத்துக்குமார், சரவணன் ஆகியோரை தனித்தனியாக காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இருந்தபோதிலும் போதுமான தகவல்களை அவர்களிடம் இருந்து போலீசாரால் பெற முடியவில்லை. 3 பேரும் முரண்பட்ட தகவல்களை கூறியதாக தெரிகிறது.

இதனால் 3 பேரையும் ஒன்றாக சேர்த்து விசாரித்தால் மட்டுமே உண்மையை வெளிக் கொண்டு வர முடியும் என கருதி அவர்களை ஒன்றாக 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தீர்ப்பை இன்றைக்கு (புதன்கிழமை) தள்ளிவைத்தார். அதன்படி, இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.