சென்னை,

விமான நிலையங்களை சுற்றி குப்பை கொட்டுவது, விமானங்களை அச்சுறுத்தும் வகையில் 'லேசர்' ஒளி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.

புதிய சட்ட விதிகள் ஜனவரி 1 முதல் அமல்

விமான பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யவும், விமான நிலைய சுற்றுப்புறங்களில் ஏற்படும் இடையூறுகளை தடுக்கவும், புதிய சட்ட விதிகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 220 அம்சங்கள் அடங்கிய புதிய விதிகள், வரும் ஜனவரி 1 முதல் நாடு முழுதும் அமலுக்கு வருகின்றன. இந்த புதிய சட்டத்தில், விமான பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

18 கி.மீ. சுற்றளவிற்குள் 'லேசர்' ஒளிக்கதிர் வீச்சுகளை பாய்ச்ச தடை

குறிப்பாக விமான நிலையங்களில் இருந்து 18 கி.மீ. சுற்றளவிற்குள் விமானிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் 'லேசர்' ஒளிக்கதிர் வீச்சுகளை பாய்ச்ச தடை விதிக்கப்பட்டுள்ளது.

குழப்பம் ஏற்படுத்தும்

விமான நிலையங்களை சுற்றி 9 கி.மீ. தொலைவிற்குள் விமானிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில், பிரகாசமான விளக்குகளை அமைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதேபோல, விமானங்கள் தரையிறங்கும் போதும், புறப்படும் போதும் பறவைகள் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்க விமான நிலைய சுற்றுச்சுவரில் இருந்து 10 கி.மீ. சுற்றளவிற்குள் திறந்த வெளியில் இறைச்சி கழிவுகள், குப்பை கொட்டுவது, பறவைகளை ஈர்க்கும் செயல்களில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு, குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப 10 நிலைகளில் அபராதம் விதிக்கப்படும். அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்க புதிய சட்ட விதிகள் வழிவகை செய்கின்றன.

இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் கூறியதாவது:

விமான பயணியரின் பாதுகாப்பு முதன்மையானது. சமீப காலமாக விமான நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் லேசர் ஒளி அடிப்பது, குப்பை மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால், பறவைகள் மோதும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

சட்ட நடவடிக்கை

இதை தடுக்கவே பழைய, 1937-ம் ஆண்டு விதிகளுக்கு பதிலாக, காலத்திற்கேற்ற கடுமையான தண்டனைகளுடன், 'பாரதிய வாயுயான் விதிகள் 2026' கொண்டு வரப்பட்டுள்ளன. விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது எந்தவித பாரபட்சமுமின்றி, உச்சபட்ச அபராதம் விதிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் டி.ஜி.சி.ஏ. என்ற விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.