சென்னை,

காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷுக்கு ஐ.டி விங் தொண்டர்களைப் போலக் கையில் கிடைப்பதையெல்லாம் ஆராயாமல் எடுத்துப் பதிவிடுவதே ஒரு தேசியப் பொதுச்செயலாளருக்கு அழகா?. ஒரு பொறுப்புள்ள தேசியப் பொதுச்செயலாளராக, உண்மைத் தன்மையை முழுமையாகச் சரிபார்த்து, தமிழகத்தின் வரலாற்றையும் திருப்பரங்குன்றம் மலையின் உண்மை நிலையையும் புரிந்துகொண்டு பதிவிடுங்கள்.

நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட ‘திருப்பரங்குன்றம்’ புத்தகத்தை (பக்கம் 129) முழுமையாகப் படியுங்கள். நாயக்கர் காலத்து அந்தத் தீபத்தூணில் "கல்வெட்டுக்கு மேல் அனுமன் ஒரு கையை ஓங்கிக்கொண்டு முகத்தை இடதுபக்கம் திருப்பிக் கொண்டிருப்பதாகச் சிற்பமும் உள்ளது. இத்தீபத்தூண் ஆண்டவனுடைய தலையின் உச்சியில் நாட்டப்பட்டிருப்பதாகவும்..." என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீங்கள் சுட்டிக்காட்டிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதே தீபத்தூணில்தான் (அனுமன் சிற்பமும் நாயக்கர் காலக் கல்வெட்டும் கொண்ட, முருகப்பெருமான் மூலஸ்தானத்திற்கு நேர் மேலே அமைந்துள்ள அந்த அசல் தீபத்தூணில்தான்) இந்து சமய அறநிலையத்துறை நேற்றைய அறிக்கையில் தெளிவுபடுத்தியபடியும், ஆகம விதிகளின்படியும் முறையாகத் தீபம் ஏற்றப்பட்டுள்ளது.

ஆனால், ஆங்கிலேயர் காலத்தில் நடப்பட்ட வெறும் 'சர்வே கல்லை' காட்டி, "இதோ இதுதான் தீபத்தூண், இதில் ஏற்றுங்கள்" என்று நீங்களும் உங்கள் கூட்டத்தினரும் அடம்பிடிப்பது எவ்வளவு பெரிய அறியாமை! அந்தச் சர்வே கல்லில் அனுமன் சிற்பமோ, நாயக்கர் காலக் கல்வெட்டோ, எந்த வரலாற்று ஆதாரமோ கிடையாது என்பது கூடவா தெரியவில்லை?.

திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் வந்து இந்த இரண்டு இடங்களையும் கண்ணால் பார்க்காமலேயே, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்பி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் அஜெண்டா! ஆனால், இது தமிழ்நாடு; இங்கு மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் உங்களின் எண்ணங்கள் ஒருபோதும் நிறைவேறாது.

எத்தனை நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தமிழர்கள் எப்போதும் சகோதரத்துவத்துடனும் விழிப்புணர்வுடனும் ஒன்றிணைந்து நிற்பார்கள் என்பதைத் தமிழக மக்களும் அரசும் தங்களின் அமைதியான அணுகுமுறையால் உங்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்கள். இனியாவது வரலாற்றைத் திரித்துப் பொய்களைப் பரப்பும் வேலையை நிறுத்திக்கொள்ளுங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.