ஈரோடு,

4 இடங்களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலைகள் மற்றும் தி.மு.க. அலுவலக கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியதை கண்டித்து நடந்த சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

சிலைகள் உடைப்பு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் தலைவர்கள் சிலைகள் அமைந்துள்ள வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையின் முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கருப்பு கண் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமடைந்து இருந்தது.

மேலும், ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி சிலை வளாகத்தில் உள்ள நூலகத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும், மணல்மேடு பகுதியில் உள்ள தி.மு.க. அலுவலகத்திலும் கதவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது.

அதே நேரம் மொடக்குறிச்சியில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் சிலையிலும் கண் கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை 10 மணி அளவில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.

ஆனால் உரிய பதில் கிடைக்காததால் முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் கட்சியின் நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் திரண்டனர்.

சாலை மறியல்

அவர்கள் அங்கு இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தொண்டர்கள் 'திடீர்' என்று நடுரோட்டில் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சிலைகளை சேதப்படுத்திய நபரை பிடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சிலையை சேதப்படுத்தியவர் ஹரி விக்னேஷ் (வயது 26) என்பதும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீசார் கூறினர்.

இந்தநிலையில் நேற்று மாலை மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரி விக்னேசை கைது செய்து எழுமாத்தூர் கோரட்டில் ஆஜர்படுத்தினர்.