இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கொண்டாடும் ஒரு தொடராக மாறியிருப்பது ஐபிஎல். 20வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்தாண்டு நடக்கிறது.

மினி ஏலம்:

அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கு விடுவிக்கப்படும் வீரர்கள் பட்டியல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள தகவலின் அடிப்படையில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மினி ஏலத்தில் பங்கேற்க 1220 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 14 இந்திய வீரர்கள், 170 வெளிநாட்டு வீரர்கள், 798 இந்திய அணிக்காக ஆடாத இந்திய வீரர்கள் அடங்குவார்கள்.

சேவாக் மகன் விலை என்ன?

இந்த ஐபிஎல் மினி ஏலத்திற்கான பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பைத் தொடரில் அசத்திய ஆர்யவீர் சேவாக்கும் பதிவு செய்துள்ளார். பிரபல அதிரடி பேட்ஸ்மேனான சேவாக்கின் மகனாகிய இவரின் அடிப்படை விலை ரூபாய் 30 லட்சம் ஆகும். 

ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டியில் தனி ஆளாக வெற்றி பெற வைத்த மோகித்தும் பதிவு செய்துள்ளார். பந்துவீச்சில் அசத்திய காவ்யன் பட்டேலும் தனது பெயரை மினி ஏலத்திற்கு பதிவு செய்துள்ளார். இவர்களது அடிப்படை விலை ரூபாய் 19 லட்சம் ஆகும். ஆனால், அதே தொடரில் இந்திய அணியை வழிநடத்திய லக்ஷயா ராய்சந்தனி தனது பெயரை பதிவு செய்யவில்லை. மேலும், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டிராவிட்டின் மகனும் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

இறுதிப்பட்டியல்:

ஏலத்தில் பங்கேற்க உள்ள வீரர்களின் இறுதிப்பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வரும் டிசம்பர் 1ம் தேதி வெளியிட உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க வங்கதேச வீரர்கள் பலரும் ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஹசன் மகமூத், பர்வேஸ் ஹொசைன், ரிபோன், ரிஷத் ஹாெசைன்,  சைஃப் ஹாசன், ஷாக் மெஹதி ஹாசன், ஷமிம் ஹொசைன், தெளகித் ஹிரிதோய் ஆகியோர் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்காக ஆடிய வீரர்களாகிய ஆகாஷ் தீப் ( ரூபாய் 2 கோடி), ஆவேஷ் கான் ( ரூபாய் 2 கோடி), தீபக் சாஹர் ( ரூபாய் 2 கோடி), தீபக் ஹுடா ( ரூபாய் 75 லட்சம்), ஜெய்தேவ் உனத்கட் ( ரூபாய் 1 கோடி), கருண் நாயர் ( ரூபாய் 75 லட்சம்), குல்தீப் சென் ( ரூபாய் 75 லட்சம்), மயங்க் அகர்வால் (ரூபாய் 75 லட்சம்), ராகுல் திரிபாதி ( ரூபாய் 75 லட்சம்), துஷார் தேஷ்பாண்டே ( ரூபாய் 1 கோடி), உமேஷ் யாதவ் ( ரூபாய் 1 கோடி) மற்றும் உம்ரான் மாலிக் (ரூபாய் 1 கோடி)க்கு இந்த ஏலத்தில் பங்கேற்க உள்ளனர்.

மீண்டும் வரும் பென் ஸ்டோக்ஸ்:

இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்திருக்கும் மற்றொரு சர்வதேச வீரர் பென் ஸ்டோக்ஸ். அடிப்படை விலையான ரூபாய் 2 கோடிக்கு தன்னுடைய பெயரை பென் ஸ்டோக்ஸ் பதிவு செய்துள்ளார். சென்னை, ராஜஸ்தான் அணிக்காக ஆடிய அனுபவம் கொண்ட அவர் தலைசிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். ஆனால், அவரால் ஐபிஎல் தொடரில் மற்ற பொல்லார்ட், ரஸல் போன்ற ஆல் ரவுண்டர்கள் போல ஜொலிக்க இயலவில்லை. அன்கேப்ட் வீரர்கள் பட்டியலில் இஷாந்த் சர்மா தனது பெயரை பதிவு செய்துள்ளார்.