இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையே நடக்கும் கடைசி மற்றும் 5வது ஒருநாள் போட்டி இன்று அந்த நாட்டில் உள்ள மவுண்ட் மாங்கனேயில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசி வருகிறது.
மீண்டும் சொதப்பும் இந்திய பேட்டிங்:
இந்த தொடர் முழுவதும் இரு அணிகளும் பேட்டிங்கில் பெரியளவு சோபிக்காத நிலையில், கடந்த போட்டியில் நியூசிலாந்து அசத்தியது. ஆனால், இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக ஆடி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர்.
இன்று அதே மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது கம்பேக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், சீட்டுக்கட்டு போல சரிந்து வருகின்றனர். இந்த தொடர் முழுவதும் சொதப்பலாக ஆடி வந்த ரோகித் சர்மா இந்த போட்டியில் 7 ரன்களுக்கு அவுட்டானார். அவருக்கு பிறகு வந்த விராட் கோலி கடந்த போட்டியில் முதல் பந்திலே அவுட்டான நிலையில், இந்த போட்டியில் 5 ரன்களில் அவுட்டானார்.
வாய்ப்பை வீணாக்கிய ருதுராஜ்:
தன்னை நிரூபித்துக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்த ருதுராஜ் கெய்க்வாட் கடந்த போட்டியில் சொதப்பியது போல இந்த போட்டியிலும் 18 ரன்களில் அவுட்டானார். கேப்டனாக பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வரும் ஸ்ரேயாஸ் ஐயர் 22 ரன்களுக்கு அவுட்டாக ஓரளவு சிறப்பாக ஆடிய அக்ஷர் படேலும் 46 ரன்களுக்கு அவுட்டானார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் மட்டுமே இதுநாள் வரை சிக்கலாக இருந்த நிலையில், தற்போது டாப் ஆர்டரும் தடுமாறி வருகிறது. கேப்டன் சுப்மன்கில் இந்த இரு போட்டியிலும் இல்லாததும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. அவர் முதல் இரு போட்டியில் பெரியளவில் சோபிக்காவிட்டாலும் அணியை சிறந்த முறையில் வெற்றி பெறவைத்தார்.
மிடில் ஆர்டரும் பரிதாபம்:
இந்தியாவின் டாப் ஆர்டர் மிகவும் மோசமான நிலையில் ஆடி வருவது பல விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. அடுத்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாக மாறியுள்ளது. இந்திய அணிக்கு வெளிநாட்டு மண் எப்போதும் சவாலாகவே இருந்துள்ளது. ஆனால், 2000ம் காலகட்டத்திற்கு பிறகு இந்தியா தன்னை நன்றாகவே மெருகேற்றிக் கொண்டுள்ளது.
பலவீனத்தை சரி செய்வது எப்போது?
அடுத்தாண்டு உலகக்கோப்பைக்கு ஆடுவதற்கு ஏற்ப இந்தியாவில் மைதானங்களை தயார் செய்து இந்திய வீரர்கள் இனி வரும் ஒருநாள் தொடர்களில் தயாராக வேண்டியது அவசியமாகவும் மாறியுள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டரில் உள்ள பலவீனம், ப்ளேயிங் லெவனில் உள்ள சிரமங்களையும் பிசிசிஐ சரி செய்ய வேண்டியது அவசியமாக மாறியுள்ளது.

