சென்னை,
உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தீபாவளி
இந்து மதக்கடவுளான கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் வகையில் இந்து மதத்தினரால் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி ஆகும். வட இந்தியாவில் இந்து மதக்கடவுள் ராமர் தனது 14 ஆண்டுகள் வனவாசத்தை முடித்துக்கொண்டு லட்சுமணன் , சீதாவுடன் அயோத்திக்கு திரும்பிய தினத்தை தீபாவளியாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் மக்கள் விளக்கேற்றி, கோலமிட்டு கொண்டாடுகின்றனர். அதேபோல், உலகம் முழுவதிலும் உள்ள இந்து மதத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றார்.
தீபாவளி கொண்டாட்டம்
இந்நிலையில், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் இன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதிகாலையே நல்லெண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து கடவுள்களுக்கு படையலிட்டு குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
வீடுகளில் பலகாரங்கள் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், தீபம் ஏற்றியும் மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். புதிதாக திருமணமான தம்பதியினர் பெண்ணின் வீட்டில் முதல்முறையாக கொண்டாடும் தீபாவளி ’தலை தீபாவளி’ என்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

