சென்னை,
சென்னை ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பசுமை பூங்காவில் செயல்படும் அரசு நூலகத்தில் தமிழ் இலக்கியம் என்ற பிரிவில், இலக்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் உள்ள தொழில் அதிபர் ஜெம் வீர மணி குறித்த புத்தகமும் இடம்பெற்றுள்ளது.
'பயணங்கள் பாடங்கள்' என்ற தலைப்பில் சுமார் 200 பக்கங்களை கொண்ட அந்த புத்தகத்தில் ஜெம் வீரமணி தனது நிறுவனங்கள் சார்பில் பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்ற பயணம், அங்கு சந்தித்த சூழல், மனிதர்கள் உள்ளிட்ட பல தரவுகள் புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
மேலும் தனது நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்பட்ட நிறுவனங்கள், கட்டிடங்கள் முன்பு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும், பல நெருங்கிய நண்பர்களுடன் சென்ற இடங்களின் புகைப்படம் என பல குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த புத்தகத்தை 'ராணி மைந்தன்' என்பவர் எழுதி உள்ளார்.
கோவை அரசு நூலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் ஏற்கனவே சர்ச்சை எழுந்துள்ள நிலையில், தற்போது ஆவடி அரசு நூலகத்தில் போக்சோ வழக்கில் கைதான தொழில் அதிபர் குறித்த புத்தகம் இடம் பெற்றிருப்பதும் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

