தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்ட நிலையிலும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றதால் மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

மீன் வரத்து அதிகம்

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற அனைத்து மீனவர்களும் நேற்று கரைக்கு திரும்பினர்.

கரைக்கு திரும்பிய மீனவர்களுக்கு மீன் பாடு நன்றாக இருந்ததால் அவர்கள் பெரிய அளவிலான மீன்களை அதிகளவில் கொண்டு வந்தனர். இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து அதிகம் காணப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை முதலே மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமும், வியாபாரிகள் கூட்டமும் அலைமோதியது. அவர்கள் போட்டிப்போட்டு மீன்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன் ஏலக்கூடத்தில் நேற்று சீலா மீன் கிலோ ரூ.1,100 வரையும், விளைமீன் கிலோ ரூ.600 வரையும், ஊளி பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரையும் விற்பனையானது.

மீனவர்கள் அதிகளவில் பிடித்து வந்த ஐலைஸ் மீன் கிலோ ரூ.190 முதல் ரூ.200 வரையும், வங்கனை மீன் கிலோ ரூ.100 வரையும், நண்டு கிலோ ரூ.700 வரையும் விற்பனையானது. மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்ட நிலையிலும் மீன்கள் விற்பனை அமோகமாக இருந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.