வயநாடு நிலச்சரிவில் தன் குடும்பத்தை இழந்த எஸ். ஸ்ருதி புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
கேரள மாநிலத்தில், 2024-இல் ஏற்பட்ட வயநாடு நிலச்சரிவில் பெற்றோர் மற்றும் சகோதரி உட்படத் தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரை ஸ்ருதி இழந்தார். அவரது வீடும் இந்தப் பேரிடரில் முழுமையாக அழிந்தது. அந்த இழப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், நடந்த ஒரு சாலை விபத்தில் ஸ்ருதிக்கு நிச்சயக்கப்பட்ட மணமகன் ஜென்சன் பலியானார்.
மேலும், அந்த விபத்தில் ஸ்ருதியும் காயமடைந்தார். அவரது துயரமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, மாநில அரசு அவருக்கு வருவாய்த்துறையில் எழுத்தர் பணி வழங்கியது. இந்த நிலையில் ஸ்ருதி, சனிக்கிழமை குருவாயூர் கோயிலில் சந்தீப் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கினார்.
ஸ்ருதியின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே. ராஜன் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது. ஸ்ருதியை மணந்த மானந்தவாடியைச் சேர்ந்த சந்தீப்பும் ஒரு அரசு ஊழியர் ஆவார். அவர் வயநாடு ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
திருமணம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி, "என் வாழ்க்கையைப் பற்றி எல்லாவற்றையும் தெரிந்துகொண்ட பிறகே சந்தீப் என்னை ஏற்றுக்கொள்ள முன்வந்தார். நாங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி," என்று தெரிவித்தார்.

