தேனி,

தமிழக-கேரளம் மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது. தென் மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், இந்த ஆண்டு ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட வேண்டிய முதல் போக நெல் பாசனத்துக்கான தண்ணீர், 2 மாதங்கள் தாமதமாக ஆகஸ்டு 8-ந்தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதன் காரணமாக தமிழக பகுதிக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டு வந்த தண்ணீரின் அளவு வினாடிக்கு 800 கன அடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கேரளம் மாநிலம் மற்றும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று முன்தினம் இரவு பெய்த கன மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவதுடன், நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை அணைக்கு வினாடிக்கு 634 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கன மழை காரணமாக நீர்வரத்து வினாடிக்கு 1,782 கன அடியாக அதிகரித்து அணையின் நீர்மட்டம் 123 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் அணையில் தற்போது 3,163 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.