சென்னை,

உலகம் முழுவதும் தீபாவளி நாளை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், தீபாவளியை பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி வெடித்து கொண்டாடுங்கள் என்று வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியதாவது,

அனைவருக்கும் எனது அன்பு வணக்கம்

எல்லா ஆண்டுகளையும்போல் இந்த ஆண்டும் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாளை தீபாவளி பண்டிகையின்போது அனைவரும் பெரிய அளவில் பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும் என்று எல்லா ஆண்டும் வேண்டுகோள் வைக்கிறேன். இந்த ஆண்டும் அதே வேண்டுகோளை வைக்கிறேன்.

தமிழ்நாட்டில் பட்டாசு தொழிற்சாலைகள் மூலம் 3 லட்சம் பேர் நேர்முக வேலைவாய்ப்பும், 5 லட்சம் பேர் மறைமுக வேலைவாய்ப்பும் பெறுகின்றனர். குறிப்பாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி மையப்புள்ளியாக உள்ளது.

இந்தியாவுக்கே சிவகாசியில் இருந்துதான் அதிக பட்டாசுகளை அனுப்புகிறோம். இந்தியாவில் 4,500 பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அதில் 1,300 தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலைகள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி வெளிவந்துகொண்டிருக்கின்றன.

பசுமை பட்டாசு, காற்று மாசுபாடு, மத்திய அரசின் அமைப்புகள், சுப்ரீம் கோர்ட்டு பிரச்சினைகளை தாண்டி அனுமதி வாங்கி ஒவ்வொரு ஆண்டும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பட்டாசு தொழிலில் உள்ள முதலாளியில் இருந்து தொழிலாளி வரை அப்படித்தான் உள்ளனர்.

பட்டாசு வெடிக்கலாம் என்று தீபாவளிக்கு 2 நாட்களுக்குமுன் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி கொடுக்கும். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பட்டாசு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அதனால் நான் இன்று எனது வீட்டிற்கு அருகே உள்ள 2 பட்டாசு கடைகளுக்கு சென்று எனக்கு எனது குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கியுள்ளேன். நான் உங்களையும் கடைகளுக்கு சென்று பட்டாசு வாங்குங்கள் என்று அழைக்கிறேன்.

தீபாவளி பண்டிகையை பட்டாசுகளுடன், நல்ல வெடி சத்தத்துடன் தீபாவளியை கொண்டாடுவோம். நாம் வாங்கும் பட்டாசு யாரோ ஒருவரின் வீட்டில் அடுப்பு எரிய உதவும்.

மாசுகட்டுப்பாடு எல்லா இடத்திலும் உள்ளது. அந்த பிரச்சினை ஒருபக்கம் இருந்தாலும் கூட பட்டாசுகளால்தான் பிரச்சினை வருகிறது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த ஆண்டும் உங்கள் ஆதரவு பட்டாசு தொழிற்சாலைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இருக்க வேண்டும். உள்ளூரில் உற்பத்தி செய்த பட்டாசுகளை வீட்டின் அருகே உள்ள கடைகளில் குழந்தைகளுடன் சென்று வாங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.