மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்பு
திரையுலகில் கலைமொழியைச் செழுமைப்படுத்தியும், அரசியலில் தமிழ்மொழியின் மாண்பு, மாநில உரிமைகள் உள்ளிட்டவற்றுக்காகத் தமது கருத்தாற்றலை வெளிப்படுத்தியும் வரும் அன்புச் சகோதரர், மாநிலங்களவை உறுப்பினர், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
கலையை நேசிப்பதிலும், கருத்துகளைப் பரிமாறுவதிலும் என்றும் இளமை குன்றாத தாங்கள், கலைப்பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும், அறிவார்ந்த சிந்தனைகளாலும் அரசியல் செயல்பாடுகளாலும் சமூகத்திற்குச் சிறந்த பங்களிப்புகளை வழங்கவும் வாழ்த்துகிறேன்! என்று கூறியுள்ளார்.
இதேபோல், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவும் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நவம்பர் ஏழு
நாயகன் பிறந்தநாள்
தமிழ்நாட்டின்
பெருமிதங்களுள் ஒன்று
பத்மபூஷண் கமல்ஹாசன்
எந்தப் பூவை
நினைந்து நுகர்ந்தாலும்
அந்தப் பூவின்
வாசம் வீசுமாம்
மனோரஞ்சிதம்
நடிகர் - இயக்குநர்
கதாசிரியர் - வசனகர்த்தா
பாடகர் - பாடலாசிரியர்
தயாரிப்பாளர் - தலைவர்
என்ற
பரிமாணங்களின் பரிணாமம்
கமல்ஹாசன்
உடலென்ற ஒருபொருளை
இரும்பாய் - ரப்பராய்
கல்லாய் - களிமண்ணாய்
மடைமாற்றும் மாகலைஞன்
தாதா சாகேப் விருதுக்குப்
பெருந்தகுதி பெற்றார்
உன்னிலும் எவருண்டு?
அரசியல் ஊடாடாவிடில்
அடுத்தாண்டு உனக்குத்தான்
தர்மம் வெற்றிபெறட்டும்;
தர்மனும் வெற்றிபெறட்டும்
வாழ்க நண்பரே! என்று கூறியுள்ளார்.

