சென்னை,

"ஒருவர் பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. அதையும் தாண்டி அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு அதிக அறிவும், தியாக மனப்பான்மையும் தேவை. நமது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும்." என்றார்.

தமிழ் திரையுலகில் நடிகையாகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பிரபல நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதியரின் மூத்த மகளான இவர், 1995-ம் ஆண்டு விஜய் ஜோடியாக நடித்த 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்த வனிதா, சில ஆண்டுகள் திரையுலகில் இருந்து விலகியிருந்தார். பின்னர் மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய அவர், திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அவரது மகள் ஜோவிகாவும் தற்போது நடிப்புத் துறையில் களமிறங்கியுள்ளார்.

அரசியலுக்கு வருகிறாரா?

எப்போதும் தனது கருத்துகளை வெளிப்படையாகத் தெரிவித்து வரும் வனிதா விஜயகுமார், அடிக்கடி பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், 'நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறப்படுகிறதே?' என்று கேள்வி எழுப்பப்பட்டது.

வனிதா விஜயகுமார் பதில்

இதற்கு பதிலளித்த அவர், "ஒருவர் பிரபலமாக இருப்பதால் மட்டும் அரசியலுக்கு வந்துவிட முடியாது. அதையும் தாண்டி அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதற்கு அதிக அறிவும், தியாக மனப்பான்மையும் தேவை. நமது முழு நேரத்தையும் அரசியலுக்காக அர்ப்பணிக்க வேண்டும். ஆனால், அதற்கு நான் இப்போது தயாராக இல்லை. எனக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. எனக்கு மகள்களும் இருக்கிறார்கள். அவர்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு அரசியலுக்கு வருவது சாத்தியமில்லை" என்றார்.

வனிதா விஜயகுமாரின் இந்த பதில், அவர் தற்போதைக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணத்தில் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.