இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக உலா வருபவர் முகமது ஷமி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்த முகமது ஷமி இந்திய அணிக்காக சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்.
முகமது ஷமி ஓய்வு:
இந்த நிலையில், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது இந்திய ரசிகர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. 13 வருட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்ட முகமது ஷமி இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளதாவது,
வெள்ளை நிற சீருடையில் இருந்து விடைபெறுகிறேன். ஆனால், அதன் நினைவுகளை மட்டும் ஒருபோதும் என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. டெஸ்ட் கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டு வடிவம் மட்டுமல்ல. அது எனது வாழ்வில் மிக முக்கியமான பகுதி. இன்று கனத்த இதயத்துடனும், எண்ணற்ற அழகான நினைவுகளுடனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்துள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி பந்து வீசப்பட்டிருந்தாலும் இந்தியாவிற்காக ஆடிய பெருமிதம் என் இதயத்தில் நிலைத்திருக்கும். நன்றி டெஸ்ட் கிரிக்கெட்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
அசத்தல் பந்துவீச்சாளர்:
36 வயதான முகமது ஷமி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் இதுவரை 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு போட்டியில் அதிகபட்சமாக 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 12 முறை 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 6 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 1005 ரன்களையும் எடுத்துள்ளார். அதில் இரு அரைசதங்களும் அடங்கும்.
முகமது ஷமி 2013ம் ஆண்டு கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். கடைசியாக கடந்த 2023ம் ஆண்டு கென்னிங்டன் ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆடினார்.
உலகக்கோப்பையில் ஆடுவாரா?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஷமி ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆடுவார். அடுத்தாண்டு நடைபெற உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி ஆடுவாரா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. முகமது ஷமி 108 ஒருநாள் போட்டிகளில் ஆடி 206 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
பும்ரா, சிராஜ், புவனேஷ்வர், முகமது ஷமி காம்போ இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீசுவது என்பது மிகவும் சவாலான ஒன்றாகும். முகமது ஷமி தனது வேகத்தில் எதிரணியை பல முறை நிலைகுலைய வைத்துள்ளார்.

