நியூசிலாந்திற்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி டி20 தொடரைக் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று வெலிங்டனில் தொடங்கியுள்ளது.
இந்தியா பவுலிங்:
மழை காரணமாக இந்த போட்டி 47 ஓவர் கொண்ட ஆட்டமாக நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அவரது முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த போட்டியில் பந்துவீச்சாளர் அக்யூப் நபி அசத்தலாக பந்துவீசி வருகிறார்.
ஆரம்பமே அமர்க்களம்:
நியூசிலாந்து அணிக்காக வில் யங் - டிம் செஃபர்ட் ஆட்டத்தை தொடங்கினர். நபி வீசிய முதல் ஓவரிலே டிம் செஃபர்ட் அவுட்டானார். 5 பந்துகளை எதிர்கொண்ட அவர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். பின்னர் மறுமுனையில் ஆடிக்கொண்டிருந்த வில் யங் அக்யூப் நபி வீசிய ஓவரில் 6 ரன்களுக்கு அவுட்டானார். அவர் 17 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
6 ஓவர்களுக்குள் 11 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறி வருகிறது. அந்த அணிக்காக தற்போது ஹென்றி நிகோலஸ் - மிட்செல் ஆடி வருகின்றனர். கடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இந்த போட்டியில் சிறப்பாக ஆடி வலுவான இலக்கை நிர்ணயிக்க நியூசிலாந்து துடிப்புடன் ஆடும் என்று கருதப்படுகிறது.
பேட்டிங்:
அந்த அணியில் இன்னும் டாம் லாதம், பிலிப்ஸ், சான்ட்னர் பேட்டிங் ஆர்டரில் உள்ளனர். இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருக்கிறது என்று கவலைப்பட்ட தருணத்தில் கடந்த போட்டியிலும், இந்த போட்டியிலும் இந்திய பந்துவீச்சு பாராட்டும்படி அமைந்துள்ளது.
இந்திய அணியின் பவுலிங்கில் இன்று அர்ஷ்தீப்சிங், குர்னூர் ப்ரார், நபி, அன்சுல் கம்போஜ், அக்ஷர் படேல், நமன் தீர் என வலுவான அணியாகவே களமிறங்கியுள்ளனர். நியூசிலாந்தின் வலுவான பேட்டிங் ஆர்டரை தகர்த்தால் இவர்களுக்கு அது அடுத்தாண்டு உலகக்கோப்பைக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.
அணி விவரம்:
வில் யங், டிம் செஃபர்டர், நிகோலஸ், மிட்செல், டாம் லாதம், கிளென் பிலிப்ஸ், சான்ட்ர், நாதன் ஸ்மித், ஜேமிசன், டஃபி, டிக்னெர் இன்றைய போட்டியில் நியூசிலாந்திற்காக களமிறங்கியுள்ளனர்.
ரோகித் சர்மா, சுப்மன்கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்ஷர் படேல், , அன்சுல் கம்போஜ், நபி, குர்னூர் ப்ரார், அர்ஷ்தீப்சிங் ஆகியோர் இந்திய அணிக்காக களமிறங்கியுள்ளனர்.
இந்திய அணிக்கும் சவால்:
கடந்த போட்டியைப் போல இந்த போட்டியிலும் பந்துவீச்சு மைதானத்தில் எடுபடுவதால் இந்திய அணிக்கு சேசிங்கிலும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. கடந்த போட்டியில் பெரியளவில் சோபிக்காத சுப்மன்கில், ரோகித் சர்மா ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். விராட் கோலி தனது சிறப்பான ஆட்டத்தை இன்றும் தொடர வேண்டியது அணிக்கு மிகவும் கட்டாயமாக உள்ளது.
அடுத்தாண்டு உலகக்கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், அந்நிய மண்ணில் இந்திய அணி ஆடும் இந்த ஒருநாள் தொடர் அணிக்கு மிகப்பெரிய பயிற்சியாக அமையும் என்பதால் இந்திய அணி இந்த தொடரை வெல்ல தீவிர முனைப்புடன் உள்ளனர். இந்த போட்டியில் மழையின் பாதிப்பு குறுக்கிட்டால் ஓவர்கள் மேலும் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

