சென்னை,
விரைவு ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் அமலாகும். சில விரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கும் என்பதால், 30 நிமிடங்கள் வரை பயண நேரம் குறையும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பரில் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை
தெற்கு ரெயில்வேயில் ஆண்டுதோறும் ரெயில்களுக்கான புதிய கால அட்டவணை டிசம்பரில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி 2027-ம் ஆண்டுக்கான விரைவு, பயணியர் ரெயில்களின் புதிய கால அட்டவணை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தெற்கு ரெயில்வேயில் மின்மயமாக்கும் பணி 98 சதவீதம் நிறைவு
ரெயில்களின் சேவையை மேம்படுத்துவதிலும், ரெயில்களை தாமதம் இன்றி இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறோம். ரெயில்கள் இயக்கத்தில் தாமதத்தை குறைக்கும் வகையிலும், விரைவு ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையிலும், பல்வேறு வழித்தடங்களில் ரெயில் பாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட வாரியாக முடிந்துள்ள பணிகள் குறித்து அறிக்கைகளை பெற்றுள்ளோம். தெற்கு ரெயில்வேயில் மின்மயமாக்கும் பணி 98 சதவீதம் முடிந்துள்ளன.
புதிய கால அட்டவணை ஜனவரியில் அமல்
புதிய ரெயில்கள், கூடுதல் ரெயில்கள் இயக்கம், கூடுதல் நிறுத்தம் குறித்து ஏற்கனவே வந்த மனுக்களை பரிசீலனை செய்து வருகிறோம். ரெயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து, வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வருகிறோம். வரும் ஆண்டு ரெயில் கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அடுத்த மாதம் இறுதியில் அறிவிப்பு வெளியிட்டு, ஜனவரியில் அமலாகும். முக்கிய வழித் தடங்களில் விரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். பயண நேரம் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை குறைக்கும் வகையில் இருக்கும். இதற்கான அட்டவணை வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

