நெல்லை,
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து ஆட்டை தூக்கிச்சென்ற சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அனவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு பஸ் டிரைவர் சுப்பிரமணியன். இவர் வீட்டு தொழுவத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டு தொழுவத்தில் சிறுத்தை ஒன்று புகுந்தது. பின்னர், தொழுவத்தில் கயிற்றால் கட்டி போட்டிருந்த ஆட்டை கடித்துக் கொன்று தூக்கிச் சென்றது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு கண்விழித்த குடும்பத்தினர் இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர், இது குறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் உடனே விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்று தூக்கி சென்றதால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், சிறுத்தையை விரைந்து பிடிக்க அப்பகுதிமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

