சென்னை: ‘முரசு’ தீவிர புயலின் தாக்கத்தால் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 6 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல் நேற்று காலை தீவிர புயலாக வலுப்பெற்றது. இதன் காரணமாக, வட தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகளில் 4-ம் தேதி காலை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும். 4-ம் தேதி உள் மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை தெரிவித்துள்ளார்.
புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சாய்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சந்தரமோகன், டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், பேரிடர் மேலாண்மைத் துறைஆணையர் சிவஞானம், மாவட்ட ஆட்சியர்கள் மாலதி ஹெலன் (சென்னை), கவிதா (திருவள்ளூர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல் பாட்டு மையத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் பி.சந்தரமோகன் நேற்று கூறியதாவது: ‘முரசு’ தீவிர புயல் ஆந்திராவில் கரையைக் கடப்பதன் தாக்கம் சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளிலும் இருக்கக்கூடும்.
அதிக காற்று வீசும்போது மின் கம்பங்கள், மரங்கள் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. மின் வயர் அறுந்து கிடந்தால் அதை தொடக் கூடாது. குழந்தைகள், முதியவர்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
அதிகமழை பெய்யும்போது மக்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும். கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் அப்பகுதிகளுக்கு மக்கள் செல்லக் கூடாது.
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் 1,300 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 3 மாநில பேரிடர் மீட்பு குழுக்கள், 3 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் என மொத்தம் 6 குழுக்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கடப்பாக்கம், பாரிமுனையில் 15 செ.மீ. மணலி, மணலிபுதுநகரில் 14 செ.மீ. சாத்தாங்காட்டில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பிய விவகாரம்: உணவு, குடிநீர் வழங்காமல் சித்ரவதை செய்யப்பட்டனரா என விசாரிக்க உத்தரவு
