மும்பை,

தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிராக மும்பையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற இந்தி நடிகர் இம்ரான்கான் ஐகோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.

நாட்டை விட்டு வெளியேற நோட்டீஸ்

சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் தேர்தல் தலைமை கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கடந்த மாதம் மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில், பிரபல இந்தி நடிகர் இம்ரான்கான் கலந்து கொண்டார். இவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர் ஆவார்.

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ஒருவர் இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெளிநாட்டவர் பதிவு அலுவலகம் இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதில், போராட்டத்தில் பங்கேற்றதற்காக அக்டோபர் (கடந்த மாதம்) 28-ந்தேதிக்குள் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

ஐகோர்ட்டு கண்டனம்

இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் இம்ரான்கான் தரப்பில் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி மகேஷ் சந்திர திரிபாதி மற்றும் நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற நடிகர் இம்ரான்கானுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.

நிபந்தனையற்ற மன்னிப்பு

ஐகோர்ட்டின் இந்த கண்டனத்தை அடுத்து, நடிகர் இம்ரான்கான் தரப்பில் ஆஜரான வக்கீல் வெங்கடேஷ் தண்ட், கோர்ட்டில் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், வருங்காலத்தில் இந்தியாவில் இதுபோன்ற எந்தவொரு போராட்டங்களிலும் நடிகர் இம்ரான்கான் பங்கேற்க மாட்டார் என்று உறுதிமொழி பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இம்ரான்கான் நாட்டை விட்டு வெளியேறக்கோரிய நோட்டீசை இடைக்காலமாக நிறுத்தி வைத்ததை நீட்டித்து உத்தரவிட்டதுடன், வழக்கை அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.