அடுத்த 2 மணி நேரத்துக்கு கடலூர் உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான முரசு புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஒங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று (நவ. 3) அதிகாலை கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் தாக்கத்தால், கடலோர மாவட்டங்களில் இன்று (நவ. 3) பெய்து வருகிறது. மழை காரணமாக, கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு (காலை 10 மணி வரை) கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

