OLED, QLED அல்லது Mini LED: உங்கள் வீட்டிற்கு எது சிறந்தது? வெளிச்சம், கான்ட்ராஸ்ட், கேமிங் திறன் மற்றும் விலையை ஒப்பிட்டு சரியான டிவியை தேர்வு செய்வது எப்படி? நன்மைகள், குறைபாடுகள் என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
புதிய டிவி வாங்க திட்டமிடும் போது, அவற்றின் வெளிச்சத் திறன் (Brightness), கான்ட்ராஸ்ட் (Contrast), வண்ணங்கள் (Colours) மற்றும் விலையில் உள்ள வேறுபாடுகளைத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம். இன்றைய சந்தையில் QLED, OLED, Mini LED, Neo QLED போன்ற பல தொழில்நுட்பப் பெயர்களை நாம் காண்கிறோம். இவை அனைத்தும் மேம்பட்ட தொழில்நுட்பங்களாகத் தோன்றினாலும், நாம் தினமும் பார்க்கும் காட்சிகளில் இவை பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அதிக வெளிச்சம் கொண்ட விற்பனை ஷோரூமில் அட்டகாசமாகத் தெரியும் ஒரு டிவி, வீட்டில் இரவில் திரைப்படம் பார்க்கும்போது அதே அனுபவத்தைத் தராமல் போகலாம். அதேபோல், அதிக சூரிய வெளிச்சம் வரும் வரவேற்பறைக்கு (Living Room) கூடுதல் பணம் கொடுத்து OLED டிவி வாங்குவது சரியான முடிவாக இருக்காது. ஸ்கிரீனின் அளவு, ரெசல்யூஷன் (Resolution) ஸ்மார்ட் அம்சங்களை முடிவு செய்வதற்கு முன், டிவியின் திரைக்குப் பின்னால் செயல்படும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொள்வது முக்கியம்.
QLED என்பது Quantum Dot Light Emitting Diode என்பதன் சுருக்கமாகும். இது எல்சிடி (LCD) பேனலுடன் கூடிய எல்இடி பேக்லைட் (LED Backlight) மற்றும் வண்ணங்களை விரிவாகக் காட்டும் குவாண்டம் டாட் (Quantum Dot) அடுக்கைப் பயன்படுத்துகிறது. இதன் மிகப்பெரிய பலம் பிரைட்னஸ் ஆகும். ஜன்னல்களுக்கு எதிரே டிவி வைக்கப்பட்டிருக்கும் அல்லது அதிக விளக்கு வெளிச்சம் கொண்ட இந்திய வீடுகளுக்கு இது மிகவும் பொருத்தமானது.
விளையாட்டுப் போட்டிகள், தினசரி தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வு. வண்ணங்கள் துடிப்பாகவும், பல்வேறு பட்ஜெட்களில் பெரிய திரை அளவுகளிலும் கிடைக்கின்றன. இதில் வழக்கமான பேக்லைட் பயன்படுவதால், பிக்சல்களை முழுமையாக அணைத்து ‘முழுமையான கருப்பு’ (Perfect Black) நிறத்தை உருவாக்க முடியாது. எனவே, இருண்ட காட்சிகள் OLED டிவிகளைப் போலத் துல்லியமாக இருக்காது.
OLED என்பது Organic Light Emitting Diode ஆகும். இதில் பேக்லைட் கிடையாது; மாறாக, ஒவ்வொரு பிக்சலும் சுயமாக ஒளிரும் (Self-emissive) தன்மை கொண்டவை. கருப்பு நிறத்தைக் காட்டும்போது அந்த குறிப்பிட்ட பிக்சல்கள் தங்களை முழுமையாக அணைத்துக் கொள்கின்றன. திரைப்படங்களில் வரும் இருண்ட காட்சிகளில் நிழல்கள் ஆழமாகவும், பிரகாசமான பொருட்கள் தெளிவாகவும் தெரியும். பேக்லைட் கசிவு (Backlight Bleeding) இருக்காது. மேலும், வெவ்வேறு கோணங்களில் இருந்து பார்த்தாலும் (Wide Viewing Angles) படம் மங்காமல் துல்லியமாகத் தெரியும். தரமான திரைப்படங்கள், ஓடிடி (OTT) உள்ளடக்கங்கள் மற்றும் சினிமா தர கேமிங் விளையாடுபவர்களுக்கு மிகச்சிறந்த தேர்வு.
இவை விலை அதிகம், குறிப்பாக பெரிய திரைகளில். அதிக வெளிச்சம் கொண்ட அறைகளில் சில எல்சிடி டிவிகளை விட பிரைட்னஸ் குறைவாகத் தோன்றலாம். மேலும், நீண்ட நேரம் ஒரே நிலையான லோகோ அல்லது கேமிங் இடைமுகங்களை (HUD) திரையில் வைத்திருந்தால் 'பர்ன்-இன்' (Burn-in / நிரந்தர பிம்பப் பதிவு) ஏற்படும் அபாயம் உண்டு (நவீன டிவிகளில் இதற்கான பாதுகாப்பு வசதிகள் இருந்தாலும் கவனம் தேவை).
Mini LED என்பது OLED போன்ற தனி பேனல் அல்ல; இது வழக்கமான எல்சிடி டிவிகளில் உள்ள பேக்லைட்டின் நவீன மேம்பாடாகும். இதில் மிகச் சிறிய எல்இடி விளக்குகள் அதிக எண்ணிக்கையில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளக்குகள் தனித்தனி மண்டலங்களாகப் (Zones) பிரிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. இதனால் திரையின் பிரகாசமான பகுதியை அதிக வெளிச்சமாகவும், கருப்பான பகுதியை மங்கலாகவும் ஒரே நேரத்தில் துல்லியமாக காட்ட முடியும்.
பிரகாசமான தெருவிளக்கு மற்றும் இருண்ட பின்னணி கொண்ட HDR காட்சிகளில் இது மிகச்சிறப்பாக செயல்படும். அதிக வெளிச்சம் கொண்ட அறைகளுக்கும் ஏற்றது. இது பிக்சல் அளவில் அல்லாமல், மண்டலங்களாக ஒளிர்வதால், இருண்ட பின்னணியில் உள்ள பிரகாசமான பொருளை சுற்றி சிறிய ஒளிவட்டம் (Blooming effect) தோன்றும் வாய்ப்புள்ளது. டிவியில் உள்ள டிம்மிங் சோன்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இதன் தரம் மாறுபடும்.
பெரிய ஜன்னல்கள் கொண்ட வெளிச்சமான அறைக்கு QLED மற்றும் Mini LED டிவிகளே முன்னுரிமை பெறுகின்றன. பகல் நேரங்களில் டிவி பார்ப்பவர்கள் பிரைட்னஸ் அளவுகளை ஒப்பிட்டுபார்த்து வாங்குவது நல்லது. பிக்சல்கள் தனித்தனியாக அணைக்கப்படுவதால் கான்ட்ராஸ்ட் விஷயத்தில் OLED-ஐ மிஞ்ச முடியாது. இரவில் விளக்குகளை அணைத்துவிட்டு படம் பார்ப்பவர்களுக்கு OLED நிகரற்றது. பகல் மற்றும் இரவு ஆகிய இரு சூழல்களுக்கும் Mini LED மிகச்சிறந்த மாற்று.
கேமிங் & விளையாட்டுகள்: எது சிறந்தது?
பிளேஸ்டேஷன் 5 (PS5), எக்ஸ்பாக்ஸ் (Xbox) அல்லது கேமிங் பிசி பயன்படுத்துபவர்கள் HDMI 2.1, 120Hz Refresh Rate, VRR (Variable Refresh Rate) மற்றும் ALLM போன்ற அம்சங்களை கவனிக்க வேண்டும். உடனடி பிக்சல் மறுமொழி (Response time) மற்றும் கான்ட்ராஸ்ட் காரணமாக OLED கேமிங்கிற்கு சிறந்தது. எனினும், ஹை-ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட Mini LED மற்றும் QLED டிவிகளும் சிறப்பான செயல்திறனைத் தரும். கிரிக்கெட், கால்பந்து போன்ற போட்டிகளைப் பகலில் பார்ப்பதற்கு அதிக வெளிச்சம் கொண்ட QLED அல்லது Mini LED பொருத்தமாக இருக்கும். அத்துடன் வேகமான காட்சிகளைக் கையாளும் 'மோஷன் ப்ராசஸிங்' (Motion Processing) திறனும் அவசியம்.
இந்தியாவில் பிராண்ட், அளவு மற்றும் தொழில்நுட்பத்தைப் பொறுத்து டிவி விலைகள் மாறுபடுகின்றன. அடிப்படை QLED மாடல்கள் பட்ஜெட் விலையில் கிடைக்கின்றன; ஆனால் OLED மற்றும் Mini LED மாடல்கள் பிரீமியம் விலைப் பிரிவில் உள்ளன. ஒரு பிரீமியம் லேபிளுக்காக மட்டுமே தரம் குறைந்த அடிப்படை மாடல் வாங்குவதை விட, சிறந்த அம்சங்கள் கொண்ட நல்ல QLED மாடலைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித் தனம். சிறிய அறைக்கு 55 இன்ச் போதுமானது; பெரிய அறைகளுக்கு 65 அல்லது 75 இன்ச் தேர்ந்தெடுக்கலாம். Dolby Vision மற்றும் HDR10+ ஆதரவு உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். கன்சோல், சவுண்ட்பார், ஸ்ட்ரீமிங் சாதனங்களை இணைக்க போதுமான HDMI போர்ட்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும். மெல்லிய டிவிகளில் ஸ்பீக்கர் திறன் குறைவாக இருக்கலாம்; சிறந்த ஆடியோ அனுபவத்திற்கு சவுண்ட்பார் வாங்க திட்டமிடுங்கள். பேனல் உத்தரவாதம் மற்றும் சர்வீஸ் ஆதரவை முன்கூட்டியே சரிபார்க்கவும்.
நீங்க எந்த டிவியை வாங்க வேண்டும்?
இம்மூன்றில் ஒன்று மட்டுமே சிறந்தது என்று கூறிவிட முடியாது; உங்க அறையின் வெளிச்ச சூழலும் பார்க்கும் பழக்கமுமே இதைத் தீர்மானிக்க வேண்டும். பட்ஜெட்டுக்குள் அடங்கும் வண்ணமயமான, பிரகாசமான அன்றாட பயன்பாட்டு டிவிக்கு QLED. இருண்ட அறையில் திரையரங்கு போன்ற காட்சி அனுபவம், திரைப்படங்கள் மற்றும் கேமிங்கிற்கு OLED. அதிக வெளிச்சமுள்ள பெரிய அறைகளில் மிகச்சிறந்த HDR பிரைட்னஸ் மற்றும் நல்ல கான்ட்ராஸ்ட் அனுபவத்திற்கு Mini LED. தொழில்நுட்பப் பெயரை மட்டும் பார்த்து முடிவெடுக்காமல், ஒரே விலை வரம்பில் உள்ள பல்வேறு மாடல்களின் பேனல் தரம், பிராசஸர் மற்றும் உத்தரவாத ஆதரவை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்வதே சிறந்தது.

